மணல் கடத்தல் குற்றச்சாட்டின்கீழ் ரூ.9½ கோடி அபராதம் விதித்தது ரத்து
மணல் கடத்தல் குற்றச்சாட்டின்கீழ் ரூ.9½ கோடி அபராதம் விதித்தது ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
மதுரை,
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொட்டல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் ‘எம்.சாண்ட்’ குவாரி நடத்துவதற்கு கலெக்டரிடம் அனுமதி பெறப்பட்டது. ஆனால், சட்ட விரோதமாக ஆற்று மணலை எடுத்து விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து நிலத்தின் உரிமையாளரான கேரள மாநிலம் கோட்டயம் கத்தோலிக்க பாதிரியாரான மனுவேல் ஜார்ஜ் என்பவர் மீது கடந்த 2020-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், அப்போதைய சப்-கலெக்டர் பிரதீப் தயாள் ரூ.9½ கோடி அபராதம் விதித்தார்.
இந்த வழக்கு விசாரணையை விரைவுப்படுத்த வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த ஐகோர்ட்டு, சட்டவிரோத குவாரி வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய கேரள மாநிலம் பத்தனம்திட்டா கத்தோலிக்க டயோசீசன் பிஷப் சாமுவேல் மாரி எரேனியஸ், பாதிரியார் ஜார்ஜ் சாமுவேல் உள்ளிட்ட சிலரை கைது செய்தனர். தற்போது இந்த வழக்கில் கைதானவர்களுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சட்டவிரோத குவாரி நடத்தியதாக சப்-கலெக்டர் விதித்த அபராதத்தை ரத்து செய்யக்கோரி பாதிரியார் ஜோஸ் சானகலயில் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதி அப்துல் குத்தூஸ் விசாரித்தார்.
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், மனுதாரர்கள் விளக்கம் அளிக்க எந்த வாய்ப்பையும் கொடுக்காமல் மிகப்பெரிய தொகையை அபராதமாக சப்-கலெக்டர் விதித்துள்ளார். இது இயற்கை நியதிக்கு எதிரானது என வாதாடினார்.
விசாரணை முடிவில், மணல் கடத்தல் குற்றச்சாட்டு குறித்து மனுதாரர் தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்பட்டபோதும், அதை கருத்தில் கொள்ளாமல் ரூ.9 கோடியே 57 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே மனுதாரருக்கு அபராதம் விதித்து அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன என்று நீதிபதி உத்தரவிட்டார்.
========
Related Tags :
Next Story