அமலாக்க துறை பறிமுதல் செய்த செல்போன் நிறுவனத்தின் ரூ.5,551 கோடி விடுவிப்பு


அமலாக்க துறை பறிமுதல் செய்த செல்போன் நிறுவனத்தின் ரூ.5,551 கோடி விடுவிப்பு
x
தினத்தந்தி 7 May 2022 2:18 AM IST (Updated: 7 May 2022 2:18 AM IST)
t-max-icont-min-icon

சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக சியோமி செல்போன் நிறுவனத்திடம் இருந்து அமலாக்கத்துறை பறிமுதல் செய்த ரூ.5,551 கோடியை விடுவித்து கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெங்களூரு:சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக சியோமி செல்போன் நிறுவனத்திடம் இருந்து அமலாக்கத்துறை பறிமுதல்  செய்த ரூ.5,551 கோடியை விடுவித்து கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரூ.5,551.27 கோடி பறிமுதல்

சியோமி இந்தியா பிரைவேட் லிமிடேட் நிறுவனம், இந்தியாவில் செல்போன்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் சட்டவிரோதமாக பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அந்நிய செலவாணி மேலாண்மை சட்டத்தின் கீழ் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி, அந்த நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.5,551.27 கோடியை கடந்த மாதம் (ஏப்ரல்) 29-ந் தேதி அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.

அந்த நிறுவனத்தின் வங்கி கணக்குகளையும் அமலாக்கத்துறை முடக்கியது. அதாவது சியோமி நிறுவனம் இந்தியாவுக்கு வெளியே 3 நிறுவனங்களுக்கும், அமெரிக்காவில் உள்ள 2 நிறுவனங்களுக்கும் ராயல்டி பெயரில் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டு இருந்ததால், அந்த நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.5,551.27 கோடியை அமலாக்கத்துறை பறிமுதல் செய்திருந்தது.

கோர்ட்டில் வழக்கு

அமலாக்கத்துறையின் இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் சியோமி நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. கர்நாடக ஐகோர்ட்டின் விடுமுறை கால நீதிபதியான ஹேமந்த் சந்திரகவுடா முன்னிலையில் அந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று இந்த வழக்கின் விசாரணை நீதிபதி ஹேமந்த் சந்திரகவுடா முன்னிலையில் நடைபெற்றது.

 அப்போது சியோமி நிறுவனம் சார்பில் மூத்த வக்கீல்கள் கணேஷ் மற்றும் சஜான் பூவய்யா ஆஜராகி வாதிட்டார்கள். அமலாக்கத்துறை பறிமுதல் செய்த பணத்தை விடுக்கும்படி வக்கீல்கள் கூறினார்கள்.

இதையடுத்து, சியோமி நிறுவனத்திடம் இருந்து அமலாக்கத்துறையினர் ரூ.5,551.27 கோடியை பறிமுதல் செய்திருப்பதற்கு தடை விதித்து நீதிபதி ஹேமந்த் சந்திரகவுடா உத்தரவிட்டுள்ளார். மேலும் அந்த நிறுவனத்தின் வங்கி கணக்குகள் எப்போதும் போல் செயல்படவும் நீதிபதி அனுமதி வழங்கி உள்ளார். 

விடுவிப்பு

இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு நோட்டீசு அனுப்பவும் நீதிபதி ஹேமந்த் சந்திரகவுடா உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கின் விசாரணையை வருகிற 12-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார். இதன்மூலம் அமலாக்க துறை பறிமுதல் செய்த சியோமி செல்போன் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.5,551.27 கோடியை கோர்ட்டு விடுவித்துள்ளது.  

Next Story