முதல்-மந்திரி பதவி வழங்க ரூ.2,500 கோடி பேரம் பேசியதாக பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ. பகீர் தகவல்


முதல்-மந்திரி பதவி வழங்க ரூ.2,500 கோடி பேரம் பேசியதாக பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ. பகீர் தகவல்
x
தினத்தந்தி 7 May 2022 2:52 AM IST (Updated: 7 May 2022 2:52 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் இருந்து வந்த இடைத்தரகர்கள் தனக்கு முதல்-மந்திரி பதவி வழங்க ரூ.2,500 கோடி பேரம் பேசியதாக பா.ஜனதா எம்.எல்.ஏ. பசனகவுடா பட்டீல் யத்னால் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

பெங்களூரு: டெல்லியில் இருந்து வந்த இடைத்தரகர்கள் தனக்கு முதல்-மந்திரி பதவி வழங்க ரூ.2,500 கோடி பேரம் பேசியதாக பா.ஜனதா எம்.எல்.ஏ. பசனகவுடா பட்டீல் யத்னால் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

யத்னால் எம்.எல்.ஏ.

கர்நாடகத்தில் பசவராஜ்பொம்மை தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் கர்நாடக மாநிலம் விஜயாப்புரா நகர தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பசனகவுடா பட்டீல் யத்னால். பா.ஜனதாவை சேர்ந்த இவர் இதற்கு முன்பு இரு முறை மந்திரி பதவி வகித்தார். 

ஆனால் இந்த தடவை அவருக்கு மந்திரி பதவி வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த இவர் முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா மீதும், மாநில பா.ஜனதா தலைவர்கள் மீதும் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி வந்தார். அத்துடன் சர்ச்சை கருத்துக்களையும் கூறி வந்தார். 

மந்திரி பதவியை தடுத்தனர்

இந்த நிலையில் பெலகாவியில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜனதாவின் சர்ச்சை நாயகர் என்று அழைக்கப்படும் பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

எனக்கு மந்திரி பதவி கிடைப்பதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பஞ்சமசாலி சமூகத்தை சேர்ந்த முருகேஷ் நிரானி, சி.சி.பட்டீல் மற்றும் சங்கர் பட்டீலுக்கு மந்திரி பதவி வழங்கினர். எக்காரணம் கொண்டும் அரவிந்த் பெல்லத்தை மந்திரி ஆக்கக்கூடாது என்று ஜெகதீஷ்ஷெட்டர் வலியுறுத்தினார். அதனால் அவருக்கு பதிலாக சங்கர் பட்டீலை ஜெகதீஷ் ஷெட்டர் மந்திரி ஆக்கினார்.

முதல்-மந்திரி பதவிக்கு ரூ.2,500 கோடி பேரம்

முருகேஷ் நிரானியிடம் பணம் உள்ளது. அதனால் அவர் மந்திரியானார். ரூ.50 கோடி, ரூ.100 கோடி கொடுத்து மந்திரி ஆகிறார்கள். டெல்லியில் இருந்து வந்த இடைத்தரகர்கள் சிலர் என்னிடம், ரூ.2,500 கோடி கொடுத்தால் முதல்-மந்திரி பதவி வழங்குவதாக கூறினார்கள். இவ்வளவு பணம் எங்கே வைப்பது, இதை வீட்டில் வைப்பதா? அல்லது கிடங்கில் வைப்பதா?. அரசியலில் எல்லா இடங்களிலும் ஏமாற்றுகிறார்கள்.

நான் வாஜ்பாய் தலைமையின் கீழ் பணியாற்றியவன். ராஜ்நாத்சிங், அருண்சிங், அத்வானி போன்ற பெரிய தலைவர்களுடன் பணியாற்றினேன். இருப்பினும் என்னிடம் முதல்-மந்திரி பதவிக்கு பணம் கேட்டனர். அவ்வாறு பணம் கொடுத்தால் அமித்ஷா, ஜே.பி.நட்டாவிடம் அழைத்து செல்வதாகவும் கூறினார்கள். பஞ்சமசாலி சமூகத்திற்கு இட ஒதுக்கீடு வேண்டி போராடி வருகிறோம். இந்த விஷயத்தில் யாரும் என்னை குறை சொல்ல வேண்டாம். இட ஒதுக்கீட்டை பெற்றே தீருவோம்.
இவ்வாறு அவர் பேசினார். 

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நேற்றும் அவர் பெலகாவியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசியல் செய்கிறார்கள்

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, அக்கட்சி தலைவர் டி.கே.சிவக்குமார், ஜனதா தளம் (எஸ்) கட்சி தலைவர் குமாரசாமி, பா.ஜனதா மூத்த தலைவர் எடியூரப்பா ஆகியோர் ‘அட்ஜெஸ்ட்மெண்ட்’ (பிரச்சிைனகளில் சமரசமாக செல்லும்) அரசியல் செய்கிறார்கள். 

அதாவது இவர்களில் யார் ஆட்சியில் இருந்தாலும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்கிறார்கள். இதை நான் சட்டசபை கூட்டத்திலேயே கூறினேன். சபையில் முன்வரிசையில் இருக்கும் தலைவர்கள் இரவில் பேசிக் கொள்கிறார்கள்.

என்னை போன்ற பின்வரிசையில் அமரும் உறுப்பினர்கள் எங்கள் தலைவர்களை உயர்ந்த இடத்தில் வைத்து பேசுகிறோம். இத்தகைய நாடக நிறுவனத்தை மூடுங்கள் என்று நான் சொன்னேன். எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்தபோது, அவரது சிகாரிபுரா தொகுதி, சித்தராமையாவின் பாதாமி தொகுதி, டி.கே.சிவக்குமார் தொகுதி ஆகியவை வளர்ச்சி அடைந்துள்ளன.

ரமேஷ் ஜார்கிகோளிக்கு எதிராக சதி

நாங்கள் வெறும் கைகளை மட்டுமே உயா்த்த எம்.எல்.ஏ.க்களாக தேர்வு செய்யப்படவில்லை. இந்த விவகாரம் குறித்து பேசிய பிறகு எனது தொகுதியின் வளர்ச்சிக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைய காரணமானவர் ரமேஷ் ஜார்கிகோளி. அவருக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும். அவருக்கு சதி வலை பின்னப்பட்டது. அதில் டி.கே.சிவக்குமாருடன் பா.ஜனதாவின் முக்கிய தலைவரின் மகனும் ஈடுபட்டார்.

பா.ஜனதாவில் தற்போது ஒருவருக்கு ஒரு பதவி என்ற விதி உள்ளது. வரும் நாட்களில் ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவி என்ற விதியும் வரும். அந்த நிலை வரும்போது, கட்சிக்காக உழைக்கும் நிர்வாகிகளுக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் கிடைக்கும்.
இவ்வாறு பசனகவுடா பட்டீல் யத்னால் கூறினார்.

கமிஷன் விவகாரம்

பெலகாவி மாவட்டம் இண்டல்கா அருகே படசே கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் கே.பட்டீல் என்ற அரசு காண்டிராக்டர், தனக்கு சேர வேண்டிய தொகையை விடுவிக்க அப்போதைய மந்திரி ஈசுவரப்பா 40 சதவீதம் கமிஷன் கேட்பதாக பகீர் குற்றச்சாட்டை கூறினார். மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் ஈசுவரப்பா தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் மடங்களுக்கு சேர வேண்டிய நிதியை பெற 30 சதவீத கமிஷன் கொடுக்க வேண்டி இருப்பதாக மடாதிபதி திங்கலேஸ்வரசுவாமி அரசு மீது குற்றச்சாட்டு கூறினார். 

பா.ஜனதாவுக்கு நெருக்கடி

இந்த நிலையில் பா.ஜனதாவைச் சேர்ந்த முன்னாள் மந்திரியும், மூத்த தலைவருமான பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ. ரூ.2,500 கோடி கொடுத்தால் தனக்கு முதல்-மந்திரி பதவி வழங்குவதாக கட்சியினர் கூறியதாக வெளியிட்ட தகவல் பா.ஜனதாவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story