குடிமனை பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்
குடிமனை பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.
கறம்பக்குடி:
கறம்பக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் 58 குடும்பத்தினருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசின் சார்பில் காலனி வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த வீடுகளில் வசிப்பவர்களுக்கு இன்னும் குடிமனை பட்டா வழங்கப்படவில்லை. இதேபோல் கறம்பக்குடி பெத்தாரி, சிவன் கோவில், சுலைமான் நகர், அம்புக்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அரசு புறம்போக்கு நிலத்தில் நீண்டகாலமாக வசித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் வசிப்பிடத்திற்கு பட்டா கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ஆனால் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை.
இதையடுத்து கறம்பக்குடி ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அரசு காலனி வீடுகள் மற்றும் புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்க கோரியும், வீடு இல்லாதவர்களுக்கு புதிய குடிமனை பட்டா வழங்க வலியுறுத்தியும் கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வடக்கு ஒன்றிய செயலாளர் வீரமுத்து, தெற்கு ஒன்றிய செயலாளர் காமராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பொன்னுசாமி, அன்பழகன் ஆகியோர் போராட்டத்தை விளக்கி பேசினர்.
பின்னர் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிமனை பட்டா கேட்டு கறம்பக்குடி துணை தாசில்தார் (தேர்தல்) பழனிவேலுவிடம் தனித்தனியாக மனு கொடுத்தனர். மேலும் நீர்நிலை பகுதிகளில் குடியிருப்போர் தங்களுக்கு மாற்று இடம் வழங்கக்கோரி மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட துணை தாசில்தார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
Related Tags :
Next Story