சத்தியமங்கலத்தில் பவானி ஆற்றில் கழிவுநீர் கலப்பதாக பொதுமக்கள் சாலை மறியல்


சத்தியமங்கலத்தில் பவானி ஆற்றில் கழிவுநீர் கலப்பதாக பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 7 May 2022 3:57 AM IST (Updated: 7 May 2022 3:57 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் பவானி ஆற்றில் கழிவுநீர் கலப்பதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் பவானி ஆற்றில் கழிவுநீர் கலப்பதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். 
சுத்திகரிப்பு நிலையம்
சத்தியமங்கலம் நகராட்சியில் கடந்த 4 வருடமாக பாதாள சாக்கடை திட்டம் பல கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகிறது. பவானி ஆற்றங்கரையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டால், கழிவுநீர் ஆற்றில் கலக்கும் என்று இந்த திட்டம் தொடங்கிய காலத்திலிருந்து சத்தி நகர பொதுமக்கள் தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
 இதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் ரோட்டரி கிளப் கட்டிடம் அருகே சேமிக்க நிலையம் கட்டப்பட்டது. மேலும் இங்கு சேமிக்கப்பட்ட கழிவு நீரை சுத்தப்படுத்த கோட்டுவீராம் பாளையத்தில் மின் மயானம் அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும் கட்டப்பட்டது. 
சாலை மறியல்
இந்தநிலையில் சேமிப்பு நிலையத்தில் கழிவுநீர் நிரம்பிவிட்டதால், அங்கிருந்து வழிந்து பவானி ஆற்றில் கலப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் சத்தி நகர பொதுமக்கள் நேற்று காலை 10.30 மணி அளவில் பண்ணாரி ரோட்டில் சின்னமசூதி அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார்கள். 
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சத்தி நகராட்சி தலைவர் ஜானகி ராமசாமி, நகராட்சி ஆணையர் சரவணகுமார், பொறியாளர் சிவக்குமார், சுகாதார அலுவலர் சக்திவேல், உதவி பொறியாளர் சாகுல்அமீது ஆகியோருடன் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். 
நடவடிக்கை
பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்களை சமாதானம் செய்து அவர்களை கழிவுநீர் வெளியேறி ஆற்றில் கலக்கும் இடத்துக்கு அழைத்து சென்று பார்வையிட்டார். 
அதன்பின்னர் பொதுமக்களிடம் நகராட்சி தலைவர் ஜானகி ராமசாமி மோட்டார்வைத்து உடனே நிரம்பிய சாக்கடை கழிவுநீர் ஒரு நாளைக்குள் உறிஞ்சப்படும். ஆற்றில் கலப்பதும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார்கள். 
1 More update

Next Story