ரசாயனத்தால் பழுக்க வைத்த 2 டன் மாம்பழங்கள் அழிப்பு


ரசாயனத்தால் பழுக்க வைத்த 2 டன் மாம்பழங்கள் அழிப்பு
x
தினத்தந்தி 7 May 2022 5:16 PM IST (Updated: 7 May 2022 5:16 PM IST)
t-max-icont-min-icon

ரசாயனத்தால் பழுக்க வைத்த 2 டன் மாம்பழங்கள் அழிப்பு

ிருப்பூரில் எத்திலின் வேதிப்பொருளை வைத்து பழுக்க வைத்த 2 டன்  மாம்பழங்களை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர்.
 மாம்பழங்கள் பறிமுதல்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் அறிவுரையின்படி உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ரவி, பாலமுருகன், கேசவராஜ், ரகுநாதன், விஜயராஜா ஆகியோர் கொண்ட குழுவினர் திருப்பூர் மாநகரம் கே.எஸ்.சி. பள்ளி வீதியில் உள்ள மாம்பழ குடோன்கள், விற்பனை கடைகளில் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இந்த ஆய்வில் எத்திலின் என்ற வேதிப்பொருளை பயன்படுத்தி செயற்கை முறையில் மாம்பழங்களை நேரடியாக வைத்து பழுக்க வைத்து விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. மொத்தம் 18 குடோன்கள், விற்பனை கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 6 கடைகளில் செயற்கை முறையில் எத்திலின் வேதிப்பொருளை பாக்கெட்டுகளில் வைத்து நேரடியாக மாம்பழங்களுடன் வைத்து பழுக்க வைத்திருந்தனர். அதன்படி 2 ஆயிரத்து 250 கிலோ எடையுள்ள மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வயிற்றுவலி
பறிமுதல் செய்யப்பட்ட மாம்பழங்கள் திருப்பூர் குப்பை கிடங்கில் கொட்டி உரிய முறையில் அழிக்கப்பட்டன. செயற்கை முறையில் எத்திலினை பாக்கெட்டுகளில் வைத்து நேரடியாக மாம்பழங்களுக்கு இடையே வைத்து பழுக்க வைத்த சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வாறு எத்திலின், கார்பைடு கல் மூலமாக மாம்பழங்களை பழுக்க வைத்து அந்த பழங்களை சாப்பிடுவதால் வயிற்றுவலி, தொண்டை எரிச்சல், வயிற்று புண், வயிற்றுப்போக்கு மற்றும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு செயற்கை முறையில் பழுக்க வைக்கும் மாம்பழங்களின் மேல்பகுதி பளப்பளப்பாகவும், ஆங்காங்கே பச்சை நிறத்திலும் காணப்படும். மாம்பழத்தின் மேல்பகுதி பழமாகவும், உள்பகுதி காயாவும் இருக்கும். மணம் குறைவாக இருக்கும். இனிப்பு தன்மை மற்றும் சாறு குறைவாக காணப்படும்.
புகார் தெரிவிக்கலாம்
பொதுமக்கள் கடைகளில் மாம்பழங்களை வாங்கினால் 10 முதல் 15 நிமிடங்கள் உப்புநீரில் ஊற வைத்து பின்னர் 2 நிமிடங்கள் மிதமான சூடான நீரில் கழுவி, தோல் நீக்கி சாப்பிட வேண்டும். வாழைப்பழம், சப்போட்டா, கொய்யா போன்ற பழங்களும் இவ்வாறு பழுக்க வைக்கப்படுகிறது. இதுகுறித்த புகார்களை 94440 42322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தெரிவித்துள்ளார்.
--------------

Next Story