ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் நவீன கதிர்வீச்சு சிகிச்சை மூலம் மூளை அருகே இருந்த கட்டியை அகற்றிய டாக்டர்கள்


ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் நவீன கதிர்வீச்சு சிகிச்சை மூலம் மூளை அருகே இருந்த கட்டியை அகற்றிய டாக்டர்கள்
x
தினத்தந்தி 7 May 2022 5:31 PM IST (Updated: 7 May 2022 5:31 PM IST)
t-max-icont-min-icon

ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் நவீன கதிர்வீச்சு சிகிச்சை மூலம் வாலிபரின் மூளை அருகே இருந்த கட்டியை அகற்றிய டாக்டர்கள் குழுவை ஆஸ்பத்திரியின் டீன் டாக்டர் தேரணிராஜன் பாராட்டினார்.

சென்னை,

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் லட்சுமி நாராயணன் (வயது 35). இவரின் காது அருகே காது நரம்பில் ஏற்பட்ட கட்டியால் செவித்திறன் பாதிக்கப்பட்டது. அவர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அந்த கட்டியை வழக்கமான அறுவை சிகிச்சைக்கு பதிலாக “ஸ்டீரியோடேக்டிக் ரேடியோ அறுவை சிகிச்சை’’ (எஸ்.ஆர்.எஸ்.) என்ற நவீன கதிர்வீச்சு அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்தனர்.

இந்த நவீன அறுவை சிகிச்சையை கதிர்வீச்சு சிகிச்சை துறை தலைவர் டாக்டர் விஜயஸ்ரீ தலைமையில் டாக்டர்கள் கிரிதரன், ஜீவா, நித்யா மற்றும் இயற்பியல் துறை டாக்டர் காளியப்பன் அடங்கிய குழு மேற்கொண்டனர்.

இந்த சிகிச்சை குறித்து டாக்டர் விஜயஸ்ரீ கூறியதாவது:-

லட்சுமி நாராயணனை பரிசோதனை செய்தபோது அவரின் மூளை பகுதிக்கு அருகில் சிறிய கட்டி இருப்பது தெரியவந்தது. மூளைக்கு மிக அருகில் நுணுக்கமான இடங்களில் இருக்கும் சிறியளவு மூளை கட்டிகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவது கடினமான ஒன்றாகும். எனவே சிறிய மூளை கட்டிகளை எஸ்.ஆர்.எஸ். என்ற நவீன சிகிச்சை மூலம் துல்லியமாக கதிர்வீச்சை செலுத்தி, அருகிலுள்ள ஆரோக்கியமான மூளை பகுதிகள் பாதிக்கப்படாதவாறு கட்டியை அகற்றலாம். எனவே இந்த சிகிச்சையை டாக்டர்கள் மேற்கொண்டனர்.

இதையடுத்து லட்சுமி நாராயணனுக்கு நவீன லேசர் கருவியின் மூலம் கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சை தொடர்ந்து 3 நாட்களுக்கு அவருக்கு அளிக்கப்பட்டது. தற்போது சிகிச்சை முடிவுற்று நோயாளி நலமுடன் உள்ளார். இந்த கதிர்வீச்சு சிகிச்சையை தனியார் ஆஸ்பத்திரிகளில் செய்தால் ரூ.5 லட்சம் வரை செலவாகும். ஆனால் இவருக்கு, ராஜீவ்காந்தி பொது ஆஸ்பத்திரியில் முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

நவீன சிகிச்சை மூலம் வாலிபரின் மூளை கட்டியை அகற்றிய டாக்டர்கள் குழுவை, ஆஸ்பத்திரி டீன் டாக்டர் தேரணிராஜன் பாராட்டினார்.

Next Story