மனிதர்கள் பல்லக்கு தூக்க தடை நீக்கப்படுமா? கலெக்டர் லலிதா பதில்


கலெக்டர் லலிதா
x
கலெக்டர் லலிதா
தினத்தந்தி 8 May 2022 12:30 AM IST (Updated: 7 May 2022 5:54 PM IST)
t-max-icont-min-icon

தருமபுரம் ஆதீனம் பட்டின பிரவேச விழாவில் மனிதர்கள் பல்லக்கு தூக்க தடை நீக்கப்படுமா? என்பது குறித்த கேள்விக்கு மயிலாடுதுறை கலெக்டர் லலிதா பதில் அளித்துள்ளார்.

மயிலாடுதுறை:-

தருமபுரம் ஆதீனம் பட்டின பிரவேச விழாவில் மனிதர்கள் பல்லக்கு தூக்க தடை நீக்கப்படுமா? என்பது குறித்த கேள்விக்கு மயிலாடுதுறை கலெக்டர் லலிதா பதில் அளித்துள்ளார். 

சாதனை தொகுப்பு புத்தகம்

தமிழக அரசு பதவி ஏற்று ஓராண்டு நிறைவடைந்து உள்ளது. இதையொட்டி மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சாதனைகளின் தொகுப்பு புத்தகத்தை கலெக்டர் லலிதா வெளியிட அதை மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குனர் முருகண்ணன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். 
நிகழ்ச்சியை தொடர்ந்து கலெக்டர் லலிதா கூறியதாவது:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது ரூ.114 கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கட்டிட பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் இன்னும் ஒரு ஆண்டுக்குள் முடிவடையும்.

தூர்வாரும் பணி

பூம்புகார் சுற்றுலா மையத்தை மேம்படுத்துவதற்கு ரூ.25 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சித்துறை சார்பில் சிறு ஏரி மற்றும் குளங்களின் நீர்வரத்து கால்வாய்கள் 1,880 கி.மீ. நீளம் தூர்வாரப்பட ஆணை வழங்கப்பட்டு உள்ளது. 
இந்த பணிகள் மழை காலத்துக்கு முன்பாக நடைபெறும். தமிழக அரசு வழிகாட்டுதலின்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து வளர்ச்சி திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். 

தடை நீக்கப்படுமா?

தொடர்ந்து கலெக்டரிடம், ‘தருமபுரம் ஆதீனத்தின் பட்டின பிரவேச விழாவில் மனிதர்கள் பல்லக்கு தூக்குவதற்கான தடை நீக்கப்படுமா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். 
அதற்கு பதில் அளித்த அவர், ‘இந்த விவகாரம் அரசின் முழு கவனத்தில் இருக்கிறது. பட்டின பிரவேச விழா தொடர்பான அறிவிப்புகள் வந்தவுடன் தெரிவிக்கப்படும்’ என்று கூறினார். 
அப்போது மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் அஸ்வின்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். 

Next Story