தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - கலெக்டர் நடவடிக்கை


தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - கலெக்டர் நடவடிக்கை
x
தினத்தந்தி 7 May 2022 6:16 PM IST (Updated: 7 May 2022 6:16 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் மீது கலெக்டர் நடவடிக்கையால் குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருவள்ளூர்,  

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் திருப்பந்தியூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (வயது 60). இவரது வீட்டில் கடந்த மாதம் 17-ந்தேதி புகுந்த மர்ம நபர்கள் 35 பவுன் தங்க நகையை திருடிச்சென்றனர். இந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில் கிருஷ்ணவேணி வீட்டில் திருடியது ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த அப்பு (27), பவன் (21), பாபு (40), ரஞ்சித் குமார் (23), நாகராஜ் (25) ஆகிய 5 பேர் என தெரியவந்தது. 

இதைத்தொடர்ந்து போலீசார் மேற்கண்ட 5 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் கைது செய்யப்பட்ட பாபு மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருந்தது தெரியவந்தது. 

இதை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமார் தொடர் திருட்டு வழக்கில் ஈடுபட்டு வரும் பாபு மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசுக்கு பரிந்துரை செய்தார். இதை ஏற்றுக்கொண்ட கலெக்டர் நேற்று பாபுவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Next Story