வாலிபரிடம் இருந்து காப்பாற்றுமாறு கதறி ஓடிய பெண்ணால் பரபரப்பு
வாலிபரிடம் இருந்து காப்பாற்றுமாறு கதறி ஓடிய பெண்ணால் பரபரப்பு
திருப்பூர்,
திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் நேற்று ஒரு பெண் கதறி அழுதபடி ஓடியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
கதறி ஓடிய பெண்
திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் நேற்று மதியம் ஒரு வடமாநில பெண்ணை, வடமாநில வாலிபர் ஒருவர் வேகமாக துரத்த, அந்த பெண் கதறி அழுதபடி ஓடினார். இதை பார்த்ததும் அங்கு நின்ற பயணிகள், மற்றும் பஸ் டிரைவர்கள் என்னவோ, ஏதோ என்று அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் பெண்ணை நெருங்கிய அந்த வாலிபர் பெண்ணிடம் இருந்த கைப்பையை பிடித்து இழுத்தார். அப்போது அந்த பெண் தன்னுடைய கைப்பையை விடாமல் 'காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்' என இந்தி மொழியில் கூச்சலிட்டார். அப்போது இருவரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி கைப்பையை பிடித்து இழுத்தவாறு இருந்தனர். இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அந்த வாலிபர் கைப்பையை திருட முயற்சிக்கிறார் என நினைத்து ஓடிப்போய் அவரை பிடித்து இழுத்தனர். ஒரு சிலர் வாலிபரை ஆவேசமாக பேசி தாக்க முற்பட்டனர். அப்போது அந்த வாலிபர், தான் எதுவும் செய்யவில்லை என்றும், தனது செல்போனை திருடிக்கொண்டு அந்த பெண்தான் ஓட முயற்சிக்கிறார் என்றும் கூறினார்.
நாடகமாடியது அம்பலம்
உடனே அந்தப் பெண் மேலும் கூச்சலிட்டவாறு கதறி அழுதார். அப்போது அங்கு கூடி நின்ற பெண்கள் கதறி அழுத பெண் மீது பரிதாபம் கொண்டனர். இந்த நிலையில் அங்கு நின்ற பஸ் டிரைவர்கள் சிலர் அந்த பெண்ணின் கைப் பையை வாங்கி சோதனையிட்டனர். அப்போது அந்த பையின் உள்ளே 2 செல்போன்கள் இருந்தன. இதை பார்த்ததும் அங்கு நின்ற வாலிபர் அதில் ஒரு போனை சுட்டிக் காட்டி அது தன்னுடைய என கூறினார். உடனே அந்த பெண் மேலும் கூச்சலிட்டு இரண்டு போன்களும் தன்னுடையதுதான் என அழுதார். இதைத்தொடர்ந்து திருடப்பட்ட செல்போனுக்கான எண்ணை தெரிவிக்குமாறு இருவரிடமும் அங்கிருந்தவர்கள் கேட்டனர். அப்போது அந்த பெண் திகைத்த நிலையில் அந்த வாலிபர் உடனடியாக செல்போன் எண்ணை தெரிவித்தார். வேறொரு செல்போன் மூலம் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டதில் அந்த போன் வாலிபருடையதுதான் என தெரிந்தது. இதற்கிடையே தனது நாடகம் அம்பலமாகி விட்டதை அறிந்த அந்த பெண் கூட்டத்தில் இருந்து நைசாக நழுவி விட்டார்.
சற்று ஏமாந்திருந்தாலும் இந்த பெண் கனகச்சிதமாக நடித்து, செல்போன் பறிகொடுத்தவரையே திருடனாக மாற்றி இருப்பார். அங்கிருந்தவர்களும் வாலிபரை ஒரு கை பார்த்திருப்பார்கள்.
Related Tags :
Next Story