காய்கறிகளால் வடிவமைத்த வனவிலங்கு உருவங்கள்


காய்கறிகளால் வடிவமைத்த வனவிலங்கு உருவங்கள்
x
தினத்தந்தி 7 May 2022 7:45 PM IST (Updated: 7 May 2022 7:45 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் கோடை விழாவையொட்டி காய்கறிகளால் வனவிலங்கு உருவங்கள் வடிவமைக்கப்பட்டு இருந்தது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

கோத்தகிரி

கோத்தகிரியில் கோடை விழாவையொட்டி காய்கறிகளால் வனவிலங்கு உருவங்கள் வடிவமைக்கப்பட்டு இருந்தது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

காய்கறி கண்காட்சி தொடக்கம்

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது. இந்த காலக்கட்டத்தில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கோடை விழா நடத்தப்படாமல் இருந்தது.  எனினும் இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்ததால், கோடை விழா நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் 2 நாள் காய்கறி கண்காட்சி இன்று தொடங்கியது. 

இதன் தொடக்க விழாவிற்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். தோட்டக்கலை இணை இயக்குனர் ஷிபிலா மேரி வரவேற்றார். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்தூரி குத்துவிளக்கு ஏற்றி, விழாவை தொடங்கி வைத்தார். கண்காட்சியில், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளை கொண்டு வனவிலங்கு உருவங்கள் பார்வையாளர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது. 

பிரமாண்ட ஒட்டகச்சிவிங்கி

குறிப்பாக சுமார் 1½ டன் கேரட், முள்ளங்கியை கொண்டு  பிரமாண்டமாக அமைக்கப்பட்ட குட்டியுடன் கூடிய ஒட்டகச்சிவிங்கி உருவம் அனைவரையும் கவர்ந்தது. இது மட்டுமின்றி மீன், வீணை, கடிகாரம், ஊட்டி உருவாகி 200 ஆண்டு நிறைவடைந்ததை குறிக்கும் வடிவம், தன்னார்வ அமைப்புகள் சார்பில் உறியடி கம்பம், பழங்குடியினரின் வீடு, இந்திய வரைபடம், கோத்தகிரி பேரூராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்காத குப்பைகளை கொண்டு காட்டெருமை, மான், கோமாதா, முயல், வீட்டு அலங்கார பொருட்கள் ஆகியவை இடம் பெற்றது. 

கோவை, திருவண்ணாமலை, தர்மபுரி, தேனி, திண்டுக்கல், காஞ்சீபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மயில், முதலை, பஞ்சவர்ண கிளி, கங்காரு, பாண்டா கரடி, கப்பல், டோரா உள்ளிட்ட உருவங்களை காய்கறிகளை கொண்டு அமைத்து காட்சிப்படுத்தி இருந்தனர். மேலும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு மஞ்சப்பைகள் வினியோகிக்கப்பட்டன. 

விழிப்புணர்வு அரங்குகள்

இது தவிர எய்ட்ஸ் விழிப்புணர்வு, நுகர்வோரின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது. இதுமட்டுமின்றி புதிதாக அமைக்கப்பட்ட வண்ண விளக்குகளுடன் கூடிய செயற்கை நீரூற்று சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்தது. மேலும் பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.  

விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி, குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி, தோட்டக்கலை உதவி இயக்குனர் ஐஸ்வர்யா, பேரூராட்சி துணை இயக்குனர் இப்ராகிம் ஷா, தாசில்தார் காயத்ரி, செயல் அலுவலர் மணிகண்டன் மற்றும் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். தொடர்ந்து நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) கண்காட்சி நடக்கிறது. 


Next Story