போக்குவரத்து நெரிசலில் திணறும் கூடலூர் நகரம்
வெளிமாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பதால், போக்குவரத்து நெரிசலில் கூடலூர் நகரம் திணறுகிறது. அங்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து செல்கின்றன.
கூடலூர்
வெளிமாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பதால், போக்குவரத்து நெரிசலில் கூடலூர் நகரம் திணறுகிறது. அங்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து செல்கின்றன.
போக்குவரத்து நெரிசல்
மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் நீலகிரியில் கோடை சீசன் களைகட்ட தொடங்கி உள்ளது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். ஊட்டி, குன்னூர், கோத்தகிரி சாலைகள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு உள்ளது.
இதற்கிடையில் தமிழகம், கர்நாடகா, கேரளா மாநிலங்கள் இணையும் கூடலூர் வழியாக வெளிமாநில சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் ஊட்டிக்கு சென்று திரும்புகின்றனர். இதனால் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக போக்குவரத்து நெரிசலால் கூடலூர் நகரம் திணறி வருகிறது. கூடலூரில் இருந்து ஊட்டி மற்றும் மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலை, கேரள மாநிலம் கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் மாவட்டங்களுக்கு செல்லும் சாலைகளிலும் வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து செல்கிறது. இதனால் போக்குவரத்து போலீசார் கூடுதல் நேரம் பணியாற்றி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வருகின்றனர்.
மாற்று சாலை
ஏற்கனவே சீசன் இல்லாத காலங்களிலும் கூடலூர் நகருக்குள் போக்குவரத்து நெருக்கடி தவிர்க்க முடியாத நிலையில் உள்ளது. இதுமட்டுமின்றி வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லாததால் அனைத்து தரப்பினரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
இதனால் சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகள் வருகைக்கு ஏற்ப வாகனங்களை திருப்பி விடும் வகையில் மாற்று சாலை அமைக்க வேண்டும் என்று கூடலூர் பகுதி மக்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
ஆய்வு செய்ய வேண்டும்
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- கர்நாடகா-கேரளாவை இணைக்கும் தமிழக பகுதியாக கூடலூர் நகரம் உள்ளது. கர்நாடகாவில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச்செல்லும் சரக்கு லாரிகள் கூடலூர் வழியாக கேரளாவுக்கு செல்கிறது. இது தவிர தினமும் ஏராளமான சுற்றுலா வாகனங்களும் இயக்கப்படுகிறது.
இதனால் ஊட்டியில் இருந்து வரும் கர்நாடக பதிவு எண் கொண்ட வாகனங்கள் நடுகூடலூர், கோத்தர்வயல், தோட்டமூலா, மார்தோமா நகர் வழியாக மைசூருக்கு செல்லும் வகையில் சாலை அமைக்க வேண்டும். இதன் மூலம் கூடலூர் நகருக்குள் வரும் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது. எனவே மாற்று சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story