விபத்தில் தாய், 6 மாத குழந்தை உள்பட 3 பேர் சாவு


விபத்தில் தாய், 6 மாத குழந்தை உள்பட 3 பேர் சாவு
x
தினத்தந்தி 7 May 2022 2:48 PM GMT (Updated: 2022-05-07T20:18:16+05:30)

ராமநகர் அருகே, அரசு பஸ்-கார் மோதிக் கொண்ட விபத்தில் தாய், 6 மாத குழந்தை உள்பட 3 பேர் இறந்தனர்.

ராமநகர்:

3 பேர் சாவு

  ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா சாத்தனூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கெம்மள்ளிதொட்டி கிராமம் வழியாக செல்லும் ஹனூர்-கனகபுரா ரோட்டில் காலை ஒரு கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிரே வந்த கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்சும், காரும் கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதி கொண்டன. இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் விரைந்து வந்து காருக்குள் இருந்தவர்களை மீட்க முயன்றனர்.

  அப்போது ஒரு குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தது தெரியவந்தது. 2 பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடினர். உயிருக்கு போராடியவர்களை கிராம மக்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து பற்றி அறிந்ததும் அங்கு சென்ற சாத்தனூர் போலீசார் காருக்குள் இறந்து கிடந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தாய், 6 மாத குழந்தை

  பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் விபத்தில் உயிரிழந்தவர்கள் உடுப்பியை சேர்ந்த அக்‌ஷதா (வயது 27), அவரது 6 மாத குழந்தை சுமந்த், கார் டிரைவர் உமேஷ் என்பது தெரியவந்தது. படுகாயம் அடைந்தவர்களில் ஒருவர் அக்‌ஷதாவின் கணவர் சுதீந்திரா என்பது தெரிந்தது.

  கனகபுராவில் உள்ள ஓட்டலில் காசாளராக வேலை செய்து வரும் சுதீந்திரா மனைவி, மகனுடன் காரில் உடுப்பியில் இருந்து கனகபுரா வந்த போது விபத்து நடந்தது தெரியவந்து உள்ளது. இந்த விபத்து குறித்து சாத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். விபத்தில் குழந்தை உள்பட 3 பேர் இறந்த சம்பவம் கனகபுராவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story