திருவெறும்பூர் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 21 பேர் காயம்


திருவெறும்பூர் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 21 பேர் காயம்
x
தினத்தந்தி 7 May 2022 8:24 PM IST (Updated: 7 May 2022 8:24 PM IST)
t-max-icont-min-icon

திருவெறும்பூர் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 21 பேர் காயம் அடைந்தனர்.

திருவெறும்பூர், ஏப்.8 -
திருவெறும்பூர் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 21 பேர் காயம் அடைந்தனர்.
ஜல்லிக்கட்டு
திருவெறும்பூர் அருகே நடராஜபுரம் கிராமத்தில் செல்லாயி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதையொட்டி திருச்சி, தஞ்சை, மதுரை, புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டன. கால்நடை மருந்துவர்கள் கால்நடைகளை பரிசோதித்து தகுதியான காளைகளை மட்டுமே ஜல்லிக்கட்டுக்கு அனுமதித்தனர்.
இதேபோல் மாடுபிடி வீரர்களும் பரிசோதிக்கப்பட்டு தகுதியானவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டை திருவெறும்பூர் தாசில்தார் ரமேஷ் தொடங்கி வைத்தார்.  முதலில், துளசி மகாநாட்டைச் சேர்ந்த பழங்கனாங்குடி மாரியம்மன் கோவில் மாடும், தொடர்ந்து துவாக்குடி, நடராஜபுரம் கோயில் மாடுகளும் அவிழ்த்து விடப்பட்டன.
21 பேர் காயம்
கோவில் மாடுகளை யாரும் பிடிக்கவில்லை. அதன்பின் பல்வேறு ஊர்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் அவிழ்ந்த்து விடப்பட்டன. வீரர்கள் காளைகளை போட்டி போட்டு அடக்கினர். இதில் சில காளைகள் பிடிபட்டன. சில காளைகள் பிடிபடாமல் உரிமையாளர்களுக்கு பரிசுகளை பெற்றுக்கொடுத்தது. சில காளைகள் தன்னை பிடிக்க வந்த வீரர்களை மிரட்டி போக்குகாட்டியது. அதுமட்டுமின்றி வீரர்களை முட்டி தள்ளியது.
இந்த ஜல்லிக்கட்டில் 755 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 220 மாடு பிடி வீரர்கள் பங்கேற்று காளைகளை அடக்கினர். இதில் காளைகள் முட்டியதில் 21 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு திருவெறும்பூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பாலாஜி தலைமையிலான குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. சேகரன்,  தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி உள்பட ஏராளமானபேர் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டை பார்வையிட்டனர். திருவெறும்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு, ஜெயசீலன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
ஜல்லிக்கட்டில் காளைகள் முறைகேடாக பங்கேற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தது.

Next Story