ஜெயலலிதா போல் ஆட்சி செய்வேன்- திருச்செந்தூரில் சசிகலா பரபரப்பு பேட்டி
“எனது அரசியல் பயணம் விரைவில் தொடங்கும். ஜெயலலிதா போல் ஆட்சி செய்வேன்” என்று திருச்செந்தூரில் சசிகலா கூறினார்.
திருச்செந்தூர்:
“எனது அரசியல் பயணம் விரைவில் தொடங்கும். ஜெயலலிதா போல் ஆட்சி செய்வேன்” என்று திருச்செந்தூரில் சசிகலா கூறினார்.
சசிகலா சாமி தரிசனம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் செய்வதற்காக சசிகலா நேற்று முன்தினம் இரவு திருச்செந்தூர் வந்தார். நேற்று அதிகாலையில் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது, சுமார் 5 அடி நீளம் கொண்ட வேல் ஒன்றை காணிக்கையாக செலுத்தினார்.
பின்னர் அங்குள்ள ஒரு தங்கும் விடுதியில் சசிகலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.வை கைப்பற்றுவது நோக்கம் அல்ல. அ.தி.மு.க. எங்களுடைய கட்சிதான். தொண்டர்கள் அனைவரும் உள்ளனர். தொண்டர்களில் இருந்து தான் தலைவர்களை உருவாக்குகிறோம். என்னுடைய அரசியல் பயணம் விரைவில் தொடங்கும்.
ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு
தி.மு.க.வின் ஓராண்டு ஆட்சியில் மக்களுக்கு நிறைய செய்துள்ளதாக கூறுகிறார்கள். ஆனால், மக்களுடைய மனசு நிறைந்ததாக தெரியவில்லை. சட்டம்- ஒழுங்கு சரியில்லை. மின்சார தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. விவசாயிகளுக்கு ஒரு லட்சம் இலவச மின் இணைப்பு கொடுத்ததாக கூறுகிறார்கள். ஆனால், மின்சாரமே வரவில்லை என்பதுதான் விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. மாதம் ஆயிரம் ரூபாய் தருவதாக தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறிஇருந்தார்கள். ஆனால், ஒரு வருடம் ஆகிவிட்டது, இதுவரை கொடுக்கவில்லை. மொத்தத்தில் மக்கள் மனதில் இந்த ஆட்சி மீது வெறுப்புதான் ஏற்பட்டுள்ளது. இதுதான் ஓராண்டு கால தி.மு.க. ஆட்சியின் சாதனையாக உள்ளது.
ஜெயலலிதா ஆட்சி போல்
நான் ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா எப்படி ஆட்சி செய்தார்களோ, நிச்சயமாக அதே மாதிரி எந்த குறையும் இல்லாமல் ஆட்சி செய்வேன். ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது எங்களுடைய கட்சிக்காரர்கள் போலீஸ் நிலையத்தில் எதுவும் கேட்க முடியாது. அந்த அளவுக்கு கட்சியை கட்டுப்பாடாக வைத்திருந்தார். தற்போது தி.மு.க. ஆட்சியில் கரைவேட்டி கட்டியவர்கள்தான் போலீஸ் நிலையத்தில் அதிகமாக இருக்கிறார்கள் என மக்களே கூறுகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் நிறைய கிராமங்களில் கடை நடத்தி வருபவர்களிடம் மாதம் தோறும் ரூ.2 ஆயிரம், ரூ.3 ஆயிரம் கேட்டு தி.மு.க.வினர் மிரட்டுவதாக வியாபாரிகள் கூறுகிறாா்கள். இதுமாதிரியான சம்பவங்கள் முதல்-அமைச்சருக்கு தெரியுமா? என்பது தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
Related Tags :
Next Story