சிவன்-பார்வதிக்கு சிறப்பு அபிஷேகம்
வேதாரண்யேஸ்வர் கோவிலில் சிவன்-பார்வதிக்கு ஆண்டு ஒரு முறை செய்யப்படும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
வேதாரண்யம், மே.8-
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்திய முனிவருக்கு திருமண கோலத்தில் சிவபெருமான் காட்சி தந்த இடம். இந்த கோவிலில் சிவலிங்கத்திற்கு பின்புறம் திருமண கோலத்தில் சிவனும், பார்வதியும் அருள்பாலிக்கின்றனர். இந்த சிவனுக்கும், பார்வதிக்கும் ஆண்டுக்கு ஒரு முறை சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று கையால் அரைக்கப்பட்ட சந்தனம் பூசப்படுவது வழக்கம். இந்த சந்தனம் ஆண்டு முழுவதும் சாமி மேல் அப்படியே இருக்கும். இந்த ஆண்டு சிவனுக்கும், பார்வதிக்கும் நேற்று சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு கடந்த ஆண்டு பூசப்பட்ட சந்தனம் களையப்பட்டு புனித நீர் அடங்கிய கலசங்கள் வைக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு பல்வேறு திரவியங்கள், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர் உள்பட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மூலிகைகளான சந்தனாதி தைலம், சாம்பிராணி தைலம் போன்றவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் செவ்வந்தி நாத பண்டார சன்னதி கோவில் நிர்வாக அதிகாரி ஜெயச்சந்திரன் மற்றும் உபயதாரர்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) உச்சிக்காலத்தில் அகஸ்தியருக்கு திருக்கல்யாண தரிசனம் நடைபெற்று, மாலை கையால் அரைக்கப்பட்ட சந்தனம் சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் பூசப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படும்.
Related Tags :
Next Story