கடலூர் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பரவலாக மழை
கடலூர் மாவட்டம் முழுவதும் சூறைக்காற்றுடன் பரவலாக மழை பெய்தது. இதில் பெண்ணாடத்தில் அடுத்தடுத்து சாய்ந்து விழுந்த மின் கம்பங்களால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்,
தமிழக பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் நிலவுவதால் கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது மற்றும் மிதமான மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பகலில் கடும் வெயில் சுட்டெரித்தது. இந்த நிலையில் இரவு பலத்த சூறைக்காற்று வீசியது. பின்னர் நள்ளிரவு நேரத்தில் சிதம்பரம் பகுதியில் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக கொட்டியது. இந்த மழை சுமார் ½ மணி நேரம் கொட்டி தீர்த்தது. அதன் பிறகு தூறிக் கொண்டே இருந்தது. இந்த மழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர், தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கியது.
31 மில்லி மீட்டர் பதிவு
இதேபோல் பரங்கிப்பேட்டை, பெண்ணாடம், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, வேப்பூர், கடலூர் என மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கொத்தவாச்சேரியில் 31 மில்லி மீட்டரும், குறைந்தபட்சமாக பெலாந்துரையில் 1 மி.மீட்டரும் பதிவாகியுள்ளது. மேலும் பகலில் சுட்டெரித்த வெயிலால் அவதியடைந்த பொதுமக்கள், இரவில் பெய்த மழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.
சாய்ந்த மின்கம்பங்கள்
இந்நிலையில் பெண்ணாடம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள் அனைத்தும் காற்றில் அடித்து செல்லப்பட்டன. மேலும் சின்னப்பள்ளம் கிராமத்தில் குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் இருந்த 3 மின் கம்பங்கள் காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து சாய்ந்து விழுந்தன. இரவு நேரம் என்பதால் அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லை. இதனால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.
இதற்கிடையே சத்தம் கேட்டு எழுந்த அப்பகுதி மக்கள், மின்கம்பங்கள் சாய்ந்து கிடந்ததை கண்டு, உடனே மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அவர்கள் உடனே மின்வினியோகத்தை நிறுத்தினர். பின்னர் மின்கம்பத்தை சீரமைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும் நேற்று மாலை வரை, மின் வினியோகம் செய்யப்படாததால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். நள்ளிரவில் அடுத்தடுத்து 3 மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல் புதுப்பேட்டை, நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் நள்ளிரவில் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.
நெல்மூட்டைகள் நனைந்தன
விருத்தாசலம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் விருத்தாசலம் அருகே உள்ள இருப்பு, எருமனூர் உள்ளிட்ட இடங்களில் திறந்தவெளியில் மலைபோல அடுக்கி அதன் மீது தார்ப்பாய் போட்டு மூடி பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால், தார்ப்பாய் பறந்து சுமார் ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story