மருந்து கடையில் கருக்கலைப்பு செய்த பெண் சாவு
ராமநத்தம் அருகே மருந்து கடையில் கருக்கலைப்பு செய்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
ராமநத்தம்,
பெரம்பலூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவருடைய மனைவி அனிதா (வயது27). இவர்களுக்கு வர்ணிகா(5), வர்ஷினி(3) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் அனிதா மீண்டும் கர்ப்பமானார். ஆனால் வேல்முருகன்-அனிதா தம்பதியினர் தங்களுக்கு 3-வது குழந்தை வேண்டாம் என்று நினைத்து கருவை கலைக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக கடந்த 5-ந்தேதி கடலூர் மாவட்டம் ராமநத்தத்தில் மருந்து கடை நடத்தி வரும், கச்சிமயிலூர் கிராமத்தைச் சேர்ந்த சீத்தாராமன் மகன் முருகனிடம்(50) சென்றனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில்...
அப்போது மருந்து கடையில் வைத்து அனிதாவிற்கு முருகன் கருக்கலைப்பு செய்தபோது, அவருக்கு அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதில் அனிதா ஆபத்தான நிலைக்கு சென்றார். மாலை வரை அவருக்கு முருகன் சிகிச்சை அளித்தும், அனிதா சுயநினைவுக்கு வரவில்லை. இதையடுத்து முருகன் தனது காரில் வேல்முருகன் மற்றும் அனிதாவை ஏற்றிக்கொண்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திாிக்கு சென்றார். ஆஸ்பத்திரியில் அனிதாவை சேர்த்துவிட்டு வேல்முருகன் வெளியே வருவதற்குள் முருகன் காரில் தப்பி சென்று விட்டார்.
பெண் சாவு
இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அனிதா நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மருந்து கடை உரிமையாளர் முருகனை வலைவீசி தேடி வருகின்றனர். முருகன் மருந்து கடை நடத்துவதற்கு உரிய படிப்பு படிக்கவில்லை என்பதும், அவர் இதற்கு முன்னர் ஜவுளிக்கடை நடத்தி வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story