கடலூரில் வி.சி.க. பிரமுகரின் காரை உடைத்த 2 பேர் கைது


கடலூரில் வி.சி.க. பிரமுகரின் காரை உடைத்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 7 May 2022 11:16 PM IST (Updated: 7 May 2022 11:16 PM IST)
t-max-icont-min-icon

கடலூரில் வி.சி.க. பிரமுகரின் காரை உடைத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் பா.ம.க. நிர்வாகிகள் 14 பேர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறக்கோரி கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.

கடலூர் முதுநகர், 

குறிஞ்சிப்பாடி அடுத்த பூவானிக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவராக அருள் ஜோதி என்பவர் உள்ளார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில விவசாய அணி துணை செயலாளராகவும் உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அருள்ஜோதியின் மனைவி சுஜாதா, தனது குழந்தைகளுடன் காரில் வந்தார். பின்னர் அவர்கள் அதே காரில் பூவானிக்குப்பத்திற்கு புறப்பட்டனர். கடலூர் செல்லங்குப்பம் பகுதியில் சென்றபோது, எதிரே கடலூரில் நடைபெற்ற பா.ம.க. பொதுக்குழு கூட்டத்துக்கு காரில் வந்த கும்பல் ஒன்று, திடீரென வி.சி.க.பிரமுகரின் காரை வழிமறித்து, கண்ணாடிகளை உடைத்தது. மேலும் காரின் முன்பக்கம் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியையும் சேதப்படுத்தியது. 

2 பேர் கைது

இதை கண்டித்தும், காரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோாியும்  விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவா்களை சமாதானப்படுத்தினர். 
இச்சம்பவம் குறித்து வி.சி.க.பிரமுகரின் கார் டிரைவர் குறிஞ்சிப்பாடி பூவானிக்குப்பத்தை சேர்ந்த பாலச்சந்திரன் (வயது 25) கொடுத்த புகாரின் பேரில், பா.ம.க. நிர்வாகிகள் ரமேஷ், விநாயகமூர்த்தி, மதி உள்பட 14 பேர் மீது கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பா.ம.க. தெற்கு ஒன்றிய செயலாளர் சகாதேவன், ஊடகப்பிரிவு செயலாளர் வினோத் குமார் (26) ஆகியோரை கைது செய்தனர். 

பா.ம.க.சாலை மறியல்

இந்த நிலையில் நேற்று காலையில் கடலூர் முதுநகர் மணிக்கூண்டு அருகே பா.ம.க. மாவட்ட செயலாளர் சண். முத்துக்கிருஷ்ணன் தலைமையிலான நிர்வாகிகள் ஒன்று திரண்டனர். தொடர்ந்து அவர்கள் திடீரென கடலூர்-சிதம்பரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  அப்போது பா.ம.க.வினர் கூறுகையில், நேற்று முன்தினம் மாலை தங்கள் கட்சி பொதுக்குழு கூட்டத்தில், கலந்துகொண்டு மோட்டார் சைக்கிள்களில் திரும்பி சென்றவர்களை, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சிலர் தாக்கியுள்ளனர். இவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கடலூர் முதுநகர் பகுதியில், தங்கள் கட்சி பேனர், கொடிக்கம்பங்களை சேதப்படுத்தியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், பா.ம.க. கட்சி நிர்வாகிகள் மீது போடப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று தெரிவித்தனர். 

போலீசாரிடம் மனு

இதையடுத்து போலீசார், உங்களது கோரிக்கைகளை மனுவாக கொடுங்கள், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தனர். இதையேற்ற பா.ம.க.வினர் மறியலை கைவிட்டு, போலீசாரிடம் மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story