கடலூரில் விசைப்படகுகளை ஆய்வுக்குட்படுத்தாத உரிமையாளர் மீது நடவடிக்கை


கடலூரில் விசைப்படகுகளை ஆய்வுக்குட்படுத்தாத உரிமையாளர் மீது நடவடிக்கை
x
தினத்தந்தி 7 May 2022 11:30 PM IST (Updated: 7 May 2022 11:30 PM IST)
t-max-icont-min-icon

கடலூரில் விசைப்படகுகளை ஆய்வுக்குட்படுத்தாவிட்டால், சம்பந்தப்பட்ட உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பாலசுப்பிரமணியம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடலூர், 

கடல் மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் தமிழகத்தின் கிழக்கு கடற்கரை நெடுகிலும் உள்ள கடற்கரை பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகள் மூலம் மீன்பிடிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்தாண்டுக்கான மீன்பிடி தடைகாலம் அமலில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் அனைத்து வகை மீன்பிடி விசைப்படகுகளும் (பதிவு செய்யப்பட்டவை மற்றும் பதிவு செய்யப்படாதவை) ஆய்வு செய்யப்பட்டு படகின் உறுதி தன்மை, எந்திரத்தின் குதிரைத்திறன் அளவு, படகின் நீள அகலம் ஆகியவை பதிவு சான்றுடன் சரிபார்க்கப்பட்டு, அதன் அடிப்படையில் மானிய விலையிலான எண்ணெய் மற்றும் இதர மானிய திட்டங்களுக்கான நிவாரண உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

விசைப்படகுகள்

இந்த மீன்பிடி விசைப்படகுகள், வெளிமாவட்டங்களில் இருந்து வரும் மீன்வளத்துறை அலுவலர்களால் கடலூர் மாவட்டத்தில் வருகிற 18 மற்றும் 19-ந் தேதிகளில் ஆய்வு செய்யப்பட உள்ளது. இந்த ஆய்வின் போது, மீனவர்கள் தங்களது விசைப்படகினை, தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் படி, ஆய்வுக்கு கட்டாயம் உட்படுத்திட வேண்டும். மேலும் ஆய்வின்போது படகு பதிவு குறித்த ஆவணங்கள், தொலைதொடர்பு கருவிகள் ஆகியவற்றை ஆய்வுக்குழுவிடம் காண்பிக்க வேண்டும்.
இந்த ஆய்வுக்குட்படுத்தப்படாத விசைப்படகுகளுக்கான மானிய விலையிலான எரிஎண்ணெய் நிறுத்தம் செய்யப்படுவதுடன், படகு உரிமையாளர் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, கடலூர் மாவட்ட, விசைப்படகு உரிமையாளர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத படகுகளை மேற்கண்ட நாட்களில் ஆய்வுக்குட்படுத்திட வேண்டும்.
மேற்கண்ட தகவல் கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story