தினத்தந்தி புகார் பெட்டி


பெரம்பலூர்
x
பெரம்பலூர்
தினத்தந்தி 8 May 2022 12:18 AM IST (Updated: 8 May 2022 12:18 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சி தந்தை பெரியார் தெரு வார்டு எண் 10, 15 பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சாக்கடை செல்வதற்கு முறையான வடிகால் இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ெதருவில் ஆறுபோல ஓடுகிறது. இதனால் அதில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறோம்.
சித்ரா, குரும்பலூர், பெரம்பலூர்

சாலையோரம் குவிந்து கிடக்கும் மணல்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம். இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. இந்த நிலையில் சாலையோரங்களில் ஆங்காங்கே மணல் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையோரங்களில் குவிந்து கிடக்கும் மணலை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ராஜூவ் நகர், அரியலூர்.

நாய்களால் தொல்லை
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, கீரமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் அளவுக்கு அதிகமாக தெரு நாய்கள் சுற்றி வருகின்றன.  குறிப்பாக இரவு நேரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், அதே வேளையில் உயிருக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது.  ஆகவே உரிய அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டு தெரு நாய்களை பிடித்து செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம். 
செந்தில், கீரமங்கலம், புதுக்கோட்டை. 

பஸ் வசதி வேண்டும்
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், தோகைமலை ஒன்றியம் முதலைப்பட்டி கிராமத்தில் சுமார் 1500 குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்திற்கு குளித்தலையில் இருந்தும் தோகைமலையில் இருந்தும் பஸ் வசதி கிடையாது. இதனால் கிராம மக்கள் குளித்தலை வட்டாட்சியர் அலுவலகம், தோகைமலை ஒன்றிய அலுவலகம் செல்லவேண்டுமானால் திருச்சி சென்று தான் போக வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் சுமார் 30 கிலோமீட்டர் தூரம் அலைய வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே முதலைப்பட்டி கிராமத்திற்கு குளித்தலையில் இருந்தும் தோகைமலையிலிருந்தும்  பஸ்கள் இயக்க போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  
முருகன், குளித்தலை, கரூர்.

Next Story