புதுக்கோட்டையில் களைகட்டும் மீன்பிடி திருவிழாக்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் மீன்பிடி திருவிழாக்கள் களைகட்டி வருகிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுவதால் பொதுமக்கள் உற்சாகத்துடன் பங்கேற்று உள்ளனர்.
புதுக்கோட்டை,
கட்டுப்பாடுகள் தளர்வு
தமிழகத்தில் ஒவ்வொரு பகுதியிலும் விழாக்கள் தனிச்சிறப்போடு நடைபெறுவது உண்டு. மதுரையில் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அதேபோல் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறும்.
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவில் திருவிழாக்கள், ஜல்லிக்கட்டு, மீன்பிடி திருவிழாக்கள் அதிகளவில் நடைபெறுவது வழக்கம். கொரோனா வந்த பிறகு கடந்த 2 ஆண்டுகளாக இந்த திருவிழாக்கள் எல்லாம் நடைபெறாமல் களையிழந்தது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் முற்றிலும் குறைந்து கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டன. இதனால் திருவிழாக்கள் மீண்டும் பழைய முறைப்படி நடைபெற தொடங்கின.
மீன்பிடி திருவிழா
பொன்னமராவதி, அரிமளம், அன்னவாசல், இலுப்பூர், கீரனூர், விராலிமலை உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடி திருவிழா தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த மீன்பிடி திருவிழா என்பது ஊர் பொதுக்குளத்தில் பொதுமக்கள் அனைவரும் இறங்கி ஒன்றாக மீன்பிடிப்பார்கள். இதில் சாதி, மதம் வேறுபாடு பார்ப்பது கிடையாது. அனைவரும் குளத்தில் இறங்கி மீனை போட்டிப்போட்டு பிடிப்பார்கள். இதில் வலை மற்றும் மீன் பிடிப்பதற்கான கச்சா, தூரி, ஊத்தா உள்ளிட்ட சில உபகரணங்களை பயன்படுத்துவது உண்டு. மேலும் சிலர் கைகளாலும் பிடிப்பது உண்டு.
இந்த மீனை பிடித்த பின் அவர்கள் தங்களது வீட்டிற்கு கொண்டு செல்வார்கள். மேலும் அதனை குழம்பு வைத்து குடும்பத்தோடு சாப்பிடுவது உண்டு. இதனால் அந்த ஊரே மீன் குழம்பு வாசம் தூக்கும். மேலும் சிலர் உறவினர்களை திருவிழாவுக்கு அழைத்து வந்து விருந்து வைப்பதும் உண்டு. இந்த மீன் பிடி திருவிழாவானது கோடை காலம் முடிவடையும் வரை நடைபெறும்.
காடுவெட்டி குள கண்மாய்
இலுப்பூர் அருகே உள்ள கட்டக்குடி காடுவெட்டி குள கண்மாயில் மீன்பிடி திருவிழா நேற்று நடந்தது. முன்னதாக ஊர் முக்கியஸ்தர்கள் வெள்ளை துண்டை எடுத்து வீசியவுடன் கண்மாய் கரையில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் கொண்டுவந்த கச்சா, தூரி, வலைகளை வீசி நாட்டுவகை மீன்களான கெழுத்தி, குரவை, ஜிலேபி, அயிரை, கட்லா, கெண்டை, விரால் ஆகிய மீன்களை பிடித்தனர். பின்னர் இந்த மீன்களை பொதுமக்கள் வீட்டிற்கு எடுத்து சென்று சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
சமூக நல்லிணக்கமாக கொண்டாடும் திருவிழா
மீன் பிடி திருவிழாவுக்கு ஒரு பெயர் காரணமும், வரலாறும் உண்டு. ஆனால் எப்போது உருவானது என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் பல தலைமுறைகளை கடந்து மீன்பிடி திருவிழா தொடர்ந்து நடைபெறுகிறது. பொதுவாக ஊரில் பெரிய குளத்தில் மழை காலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கும். அப்போது ஊர் சார்பாக மீன்களை குளத்தில் விடுவது உண்டு. இந்த மீன்களை இதற்காக விற்பனை செய்யும் இடங்களில் வாங்கி வருவது உண்டு. இதில் சிலேபி, கெண்டை, கட்லா, விரால் உள்ளிட்ட மீன் வகைகளை வாங்கி வந்து குளத்தில் விடுவது உண்டு. இந்த மீன்கள் குளத்தில் தண்ணீரில் நன்கு பரிணாம வளர்ச்சியடைந்து பெருகும். இனப்பெருக்கத்திலும் மீன் குஞ்சுகள் உருவாகும். அந்த மீன்களும் வளரும். இவ்வாறு குறிப்பிட்ட மாதங்களுக்கு குளத்தில் அந்த மீன்கள் வளரும்.
இந்த நிலையில் கோடை காலம் தொடங்கும் போது குளத்தில் தண்ணீர் வற்ற தொடங்கும். அப்போது மீன்கள் கடும் வெயிலின் தாக்கத்தால் இறந்து விடக்கூடிய சூழல் ஏற்படும். சில மீன்கள் செத்து தண்ணீரில் மிதப்பது உண்டு. இது போன்ற நிலையில் அந்த மீன்கள் வீணாகி போகக்கூடாது என்பதற்காக தான் மீன்பிடி திருவிழா கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் ஒன்று கூடி மீன்களை பிடித்து பயன்படுத்துவார்கள். அதே நேரத்தில் மீன் பிடிக்கும் போது குளத்தை சுத்தம் செய்வது உண்டு. குளத்தில் கிடக்கும் முள் செடிகள், பாசிகள் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்தப்படுகிறது. மீன்பிடி திருவிழா அன்று குளத்தில் உள்ள மடையின் முன்பு தேங்காய், பழம் சூடம் ஏற்றி பொதுமக்கள் வழிபாடு நடத்துவார்கள். மேலும் ஊர் தலைவர், விவசாய பாசனதாரர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் ஒன்றாக துண்டை தூக்கி காண்பித்து அசைப்பது உண்டு. அதன்பின் பொதுமக்கள் குளத்தில் இறங்கி மீன்பிடிப்பார்கள். இவ்வாறு நடைபெறும் இந்த திருவிழா கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது நடைபெறுவதால் பொதுமக்கள் உற்சாகமடைந்து பங்கேற்று வருகின்றனர்.
குளத்தில் பொதுமக்கள் ஒன்றாக கூடியிருப்பதை பார்த்தாலே மனதிற்கு பெரும் மகிழ்வாக இருக்கும். மேலும் விருப்பு, வெறுப்பின்றி ஒன்றிணைத்து பங்கேற்பது ஒரு சமூக நல்லிணக்கமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டில் வசிக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சிலர் மீன்பிடி திருவிழாக்களை அவர்கள் வசிக்கும் பகுதியில் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story