போலீசாரிடம் சிக்கிய செந்துறை என்ஜினீயர் காசுகளை விழுங்கியதால் பரபரப்பு


போலீசாரிடம் சிக்கிய செந்துறை என்ஜினீயர் காசுகளை விழுங்கியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 8 May 2022 12:50 AM IST (Updated: 8 May 2022 12:50 AM IST)
t-max-icont-min-icon

போலீசாரிடம் சிக்கிய செந்துறை என்ஜினீயர் காசுகளை விழுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

செந்துறை:
தேனி மாவட்டம் குமுளி அருகே கேரள மாநில எல்லைப்பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் கேரள போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒரு சிறுமியுடன் வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது திடீரென அந்த வாலிபர் தனது பையில் வைத்திருந்த சில்லறை காசுகளை விழுங்கி உள்ளார்.
இதைத்தொடர்ந்து கேரள போலீசார், அந்த வாலிபர் மற்றும் சிறுமியை குமுளி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியை சேர்ந்த 22 வயதுடைய என்ஜினீயர் என்பது  தெரியவந்தது. மேலும், அவருக்கு ஏற்கனவே அவரது அத்தை மகளை பெற்றோர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான அவர், பின்னர் பள்ளி மாணவியான ஒரு சிறுமிைய காதலித்து கேரளாவுக்கு சுற்றுலா அழைத்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து குமுளி போலீசார் அந்த வாலிபர் மற்றும் மாணவியை செந்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். செந்துறை போலீசார், அந்த வாலிபரை தேனி மாவட்டத்தில் இருந்து அழைத்து வந்து அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கே அளிக்கப்பட்ட சிகிச்சையில் 2 காசுகள் மட்டுமே வெளியே எடுக்கப்பட்டது. மேலும் 8 காசுகள் வெளியே வராத நிலையில் வாலிபரை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பெற்றோர் அந்த வாலிபரை அரியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மாணவியுடன் மோட்டார் சைக்கிளில் கேரளாவிற்கு சுற்றுலா சென்ற என்ஜினீயர், போலீசார் விசாரணையில் இருந்து தப்பிக்க காசுகளை விழுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story