தமிழக அரசின் ஓராண்டு சாதனை மலரை வெளியீடு ‘‘மக்களை தேடி மருத்துவம் மூலம் 92,218 பேர் பயனடைந்து உள்ளனர்’’ தென்காசி கலெக்டர் தகவல்


தமிழக அரசின் ஓராண்டு சாதனை மலரை வெளியீடு ‘‘மக்களை தேடி மருத்துவம் மூலம் 92,218 பேர் பயனடைந்து உள்ளனர்’’ தென்காசி கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 8 May 2022 1:01 AM IST (Updated: 8 May 2022 1:01 AM IST)
t-max-icont-min-icon

மக்களை தேடி மருத்துவம மூலம் 92218 பேர் பயனடைந்து உள்ளனர் என்று தென்காசி கலெக்டர் தெரிவித்தார்.

தென்காசி:
ஓராண்டு சாதனை மலர்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு ‘ஓயா உழைப்பின் ஓராண்டு’ என்ற பெயரில் தமிழக அரசின் சாதனை மலர் தயாரிக்கப்பட்டு உள்ளது. 
இதனை நேற்று தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் வெளியிட, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன் பெற்றுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து கலெக்டர் பேசியதாவது:-

பல்வேறு திட்டங்கள்
தென்காசி மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு அரசு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வளர்ச்சிப்பணிகள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்களின் மனுக்களுக்கு தீர்வு காணும் முக்கியத்துவம் வாய்ந்த திட்டமான முதல்வரின் முகவரி திட்டத்தின்கீழ் 486 பேருக்கு ரூ.24.23 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.12.99 கோடி செலவில் 1,823 பயனாளிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்றை தடுக்கும் வகையில் 18 வயதுக்கு மேற்பட்ட 9 லட்சத்து 45 ஆயிரத்து 823 பேருக்கு முதல் தவணை தடுப்பூசிகளும், 8 லட்சத்து 2 ஆயிரத்து 408 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளது. 

மக்களை தேடி மருத்துவம்
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 1,701 வேளாண் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ரூ.39.33 லட்சம் மதிப்பில் வேளாண் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. 
மேலும் 10,115 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் உதவியாக ரூ.4 கோடியே 75 லட்சத்து 35 ஆயிரம் நிதி வழங்கப்பட்டுள்ளது. இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் 41,980 மாணவ-மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். மக்களை தேடி மருத்துவம் மூலம் 92,218 பேர் பயனடைந்து வருகிறார்கள். 
கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் 19,599 பேர் பயனடைந்துள்ளனர். சமூக நல்லிணக்கத்துடன் வாழும் சிறந்த கிராமங்களாக பெரியபிள்ளைவலசை மற்றும் அத்திப்பட்டி கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு கிராமத்திற்கும் பரிசுத்தொகை தலா ரூ.10 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது. 
இவ்வாறு அவர் பேசினார். 
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுரேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்து மாதவன், தென்காசி உதவி கலெக்டர் கங்காதேவி, மகளிர் திட்ட இயக்குனர் குருநாதன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story