தி.மு.க. அரசு ஒரு ஆண்டு கால ஆட்சியில் ‘பெயில்’ ஆகி விட்டது
தி.மு.க. அரசு ஒரு ஆண்டு கால ஆட்சியில் ‘பெயில்’ ஆகிவிட்டது என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
வல்லம்:
தி.மு.க. அரசு ஒரு ஆண்டு கால ஆட்சியில் ‘பெயில்’ ஆகிவிட்டது என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
அ.தி.மு.க. நிவாரணம்
தஞ்சையை அடுத்த களிமேட்டில் அப்பர் சதயவிழாவையொட்டி நடந்த தேர் திருவிழாவின்போது தேர் மீது மின்சாரம் பாய்ந்த விபத்தில் 11 பேர் பலியானார்கள், 17 பேர் காயமடைந்தனர்.
பலியானவர்களின் குடும்பத்தினரை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் அ.தி.மு.க. சார்பில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கினார்.
அவருடன் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
பின்னர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-
தஞ்சையை அடுத்த களிமேடு கிராமத்தில் நடந்த தேரோட்டத்தின் போது எதிர்பாராதவிதமாக உயர் அழுத்த மின் கம்பியில் தேர் உரசியதில் 11 பேர் இறந்துள்ளனர். இது துயரமான சம்பவம். இந்த துயரமான சம்பவத்திற்கு அ.தி.மு.க. சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு ரூ.1 லட்சம் இழப்பீடும், காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து தலா ரூ.25 ஆயிரமும் அ.தி.மு.க.சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
அரசு வேலை
இந்த விபத்தில, இறந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களில் வீடு இல்லாமல் யாராவது இருந்தால் அவர்களுக்கு அரசே வீடு கட்டித் தர வேண்டும். இறந்த குடும்பத் தலைவர்களின் வாரிசுகள் கல்விச்செலவை முழுமையாக அரசே ஏற்க வேண்டும்.
தேர் செல்லும் பாதையில் சாலைகள் மேடு, பள்ளங்கள் உள்ளதா? என கண்காணிக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் இங்கு செய்ததாக தெரியவில்லை. தேரோட்டம் முடியும் வரை மின் இணைப்பை துண்டித்திருக்க வேண்டும். இந்த விபத்தின்போது கவனக்குறைவாக இருந்த அரசு அதிகாரிகள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விபத்து குறித்து அரசால் அமைக்கப்பட்ட ஒரு நபர் விசாரணைக்குழு பாகுபாடில்லாமல் விசாரிக்க வேண்டும்.
தோல்வி அடைந்துள்ளது
தி.மு.க.வின் ஓராண்டு கால ஆட்சி என்பது தோல்வி அடைந்துள்ளது. தேர்தலின்போது அளித்த எந்த ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. தி.மு.க. ஓராண்டு ஆட்சி ‘பாஸ்’ மார்க் வாங்க வில்லை, ‘பெயில்’ மார்க் தான் வாங்கியுள்ளது.
தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுடன் அரசு பஸ்சில் பயணம் செய்வது என்பது உலக மகா அதிசயம் அல்ல. தமிழகத்தில் தி.மு.க. எப்போது ஆட்சிக்கு வந்தாலும் மின்வெட்டு வரும் என்பது கடந்த கால வரலாறு.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் எம்.ஜி.எம்.சுப்பிரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சேகர், ராஜேந்திரன், ரத்தினசாமி, ராம.ராமநாதன், மாவட்ட பால்வள தலைவர் காந்தி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், ஒன்றிய செயலாளர்கள் துரை.வீரணன், சாமிவேல், நாகத்தி. கலியமூர்த்தி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
ஆஸ்பத்திரிக்கு சென்றார்
பின்னர் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு நிவாரண உதவியை ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.
Related Tags :
Next Story