‘‘மனைவியிடம் தவறாக நடக்க முயன்றதால் பேக்கரி ஊழியரை கொன்றேன்’’ கைதான வாலிபர் வாக்குமூலம்
எனது மனைவியிடம் தவறாக நடக்க முயன்றதால் பேக்கரி ஊழியரை கல்லால் அடித்து கொலை செய்தேன் என்று கைதான வாலிபர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
வேலூர்
எனது மனைவியிடம் தவறாக நடக்க முயன்றதால் பேக்கரி ஊழியரை கல்லால் அடித்து கொலை செய்தேன் என்று கைதான வாலிபர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பேக்கரி ஊழியர் கொலை
வேலூர் தொரப்பாடி கே.கே.நகரை சேர்ந்தவர் சுபேர் (வயது 26), இவர் பேக்கரி கடையில் வேலை செய்து வந்தார். வேலூர் கோட்டை அகழியில் நேற்று முன்தினம் சுபேர் பிணமாக மிதந்தார். இதுகுறித்து தகவலறிந்த வேலூர் வடக்கு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று அகழி தண்ணீரில் மிதந்த பிணத்தை மீட்டனர்.
அவருடைய உடலின் பல்வேறு இடங்களில் கல்லால் தாக்கப்பட்ட காயங்கள் இருந்தன. மேலும் சுபேர் பிணமாக கிடந்த அகழியையொட்டி ரத்தம் கொட்டி கிடந்தது. அவரை கோட்டை பூங்காவில் இருந்து தர தரவென்று இழுத்து வந்ததற்கான தடயங்களும் காணப்பட்டன.
இதையடுத்து போலீசார், சுபேர் உடலை பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிந்து இறந்த வாலிபர் குறித்து விசாரணை மேற்கொண்டார்.
மேலும் கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். ஒரு கண்காணிப்பு கேமராவில் சுபேரை வாலிபர் ஒருவர் கோட்டை பூங்காவில் வைத்து கல்லால் தாக்கி கொலை செய்துவிட்டு உடலை இழுத்து வந்து அகழியில் வீசுவது பதிவாகியிருந்தது. இதையடுத்து சுபேர் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மனைவியிடம் தவறாக நடக்க...
விசாரணையில், தொரப்பாடி கே.கே.நகரை சேர்ந்த ஜமீர் (25) என்பவர் சுபேரை கொலை செய்து கோட்டை அகழியில் வீசியது தெரிய வந்தது. அதையடுத்து அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு:-
நான் டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வந்தேன். நானும், சுபேரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் ஒன்றாக பழகி வந்தோம். ஆனால் சுபேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது மனைவியிடம் தவறாக நடக்க முயன்றார். இதனை அறிந்ததும் அவரை கண்டித்தேன்.
இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி இரவு இருவரும் கோட்டை பூங்காவில் அமர்ந்து மது அருந்தினோம். அப்போது எனது மனைவியிடம் தவறாக நடக்க முயன்றது குறித்து சுபேரிடம் கேட்டேன். அதனால் எங்களுக்குள் வாக்குவாதம், தகராறு ஏற்பட்டது.
அதில் ஆத்திரம் அடைந்த நான் அருகே கிடந்த கல்லால் அவரை பலமாக தாக்கினேன். இதில் அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்து விட்டார். அதனால் கொலையை மறைக்க உடலை கோட்டை அகழியில் வீசி விட்டு சென்றேன்.
இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து ஜமீரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story