கண்மாயில் களைகட்டிய மீன்பிடி திருவிழா
மேலூர் அருகே கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
மேலூர்
மேலூர் அருகே கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
மீன்பிடி திருவிழா
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் உள்ள பாசன கண்மாய்களில் ஊர்கட்டுப்பாட்டுடன் மீன்களை பிடிக்காமல் மீன்களை பாதுகாத்து வளர்த்து பொதுமக்கள் ஒன்றுகூடி மீன்களை பிடிக்கும் மீன்பிடி திருவிழாக்கள் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது. தண்ணீர் ஓரளவு வற்றியவுடன் பொதுமக்கள் ஒன்று கூடி ஒற்றுமையாக இலவசமாக மீன்களை பிடிப்பதும், அவ்வாறு பிடித்த மீன்களை விற்பனை செய்வது தெய்வகுற்றம் என்பதால் வீடுகளில் மீன்களை குழம்பு வைத்து சாப்பிடுவதும் பாரம்பரிய வழக்கமான ஒன்றாகும்.
கடந்த சில நாட்களாக பல்வேறு கண்மாய்களில் மீன்பிடி திருவிழாக்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அவ்வாறு மேலூர் அருகே நான்கு வழிச்சாலை சுங்கச்சாவடி அருகே அமைந்துள்ள வெள்ளரிப்பட்டி கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இந்த கண்மாய் தண்ணீரில் வளரும் மீன்களை கோடைகாலத்தில் தண்ணீர் வற்றிய பின்னர் சுற்றியுள்ள கிராம மக்கள் ஒன்று கூடி மீன்களை பிடிப்பதும் வழக்கம் ஆகும். முன்கூட்டியே இதற்கான நாள் குறித்து சுற்றியுள்ள கிராம மக்களுக்கு அறிவிக்கப்படும்.
மீன் பிடித்தனர்
இதைதொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் நத்தம், சிறுகுடி, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி, இடையமேலூர், மேலூர் அருகிலுள்ள வெள்ளரிப்பட்டி, கத்தபட்டி, முசுண்டகிரிபட்டி, நரசிங்கம்படி, பெருமாள்பட்டி, பூசாரிபட்டி, மாங்குளம், சிட்டம்பட்டி, கொடிக்குளம், பூலாம்பட்டி, திருவாதவூர், உரங்கான்பட்டி, அழகிச்சிபட்டி, புதுப்பட்டி, குப்பச்சிபட்டி, கட்டாணிபட்டி, குறிச்சிபட்டி, கூலிபட்டி, கோட்டனத்தாம்பட்டி, மன்றமலைப்பட்டி, சருகுவலயபட்டி உள்பட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பேர் வெள்ளரிப்பட்டி கண்மாயை சுற்றி கூடினர்.
கச்சா வலை, ஊத்த கச்சா, பெரிய மீன் வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களுடன் மீன்பிடிக்க கிராமத்தாரின் உத்தரவுக்காக தயார் நிலையில் பொதுமக்கள் காத்திருந்தனர். அப்போது கிராம பெரியவர்கள் பாரம்பரிய வழக்கப்படி சாமி கும்பிட்ட பின் தாங்கள் தலையில் கட்டியிருந்த வெள்ளை துண்டுகளை அவிழ்த்து அதனை கொடி போல் ஆட்டி மீன்பிடிக்க அனுமதி வழங்கினர். அப்போது கண்மாயை சுற்றியிருந்த நூற்றுக்கணக்கான பேர் கண்மாய் தண்ணீருக்குள் பாய்ந்து சென்றனர். அந்த நேரத்தில் தண்ணீரில் இருந்த மீன்கள் துள்ளி குதித்தன. பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு மீன்களை பிடித்தனர். இதனால் மீன்பிடி திருவிழா களை கட்டியது.
கமகம வாசனை
அப்போது அந்த கண்மாய்கரை அருகிலுள்ள நான்குவழி சாலையில் வாகனங்களில் சென்றவர்கள் வாகனங்களை நிறுத்தி மீன்பிடி திருவிழாவை ரசித்து பார்த்தனர். கண்மாயில் கட்லா, விரா, அயிரை, கெண்டை உள்பட பெரிய மீன்களை பொதுமக்கள் பிடித்தனர்.
பிடிபட்ட மீன்களை வீடுகளுக்கு எடுத்து சென்று சமைத்து சாமிக்கு படையிலிட்ட பின் குடும்பத்தினருடன் சாப்பிட்டு மகிழ்ந்தனர். இதனால் பல்வேறு கிராமங்களில் மீன் குழம்பு வாசனை கமகமவென காற்றில் கலந்து வந்தது.
Related Tags :
Next Story