ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிய காளைகள்
உசிலம்பட்டி அருகே எழுமலையில் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் சீறி பாய்ந்தன. மாடு மிதித்ததில் என்ஜினீயரிங் மாணவர் உயிரிழந்தார்.
உசிலம்பட்டி
உசிலம்பட்டி அருகே எழுமலையில் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் சீறி பாய்ந்தன. மாடு மிதித்ததில் என்ஜினீயரிங் மாணவர் உயிரிழந்தார்.
ஜல்லிக்கட்டு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையில் உள்ள கச்சகாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதன் பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக மற்ற காளைகளை அவிழ்த்து விடப்பட்டன.
இந்த போட்டியில் மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 500 காளைகளும், சீறிவரும் காளைகளை அடக்க சுமார் 250 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். காளைகள் மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் வீரர்களை புரட்டி எடுத்து வெற்றி கண்டன.
திமிறிய காளைகளை வீரத்துடன் வீரர்கள் அடக்கினர். மேலும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை எழுமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆரவாரத்துடன் போட்டியை கண்டு ரசித்தனர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் கிராம கமிட்டியினர் சார்பில் பீரோ, கட்டில், அண்டா, சில்வர் பானை, குக்கர் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
மாணவர் பலி
இந்த ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக எழுமலை அருகே உள்ள உத்தப்புரத்தை சேர்ந்த முத்தையா மகன் சூரியபிரகாஷ்(வயது 18) என்பவர் பார்க்க வந்திருந்தார். இவர் என்ஜினீயரிங் படித்து வந்தார். நேற்று ஜல்லிக்கட்டை பார்த்து கொண்டிருந்தபோது ஒரு காளை அவரை மிதித்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சூரியபிரகாசை சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து எழுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story