சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கில் கலபுரகி ஆயுதப்படை கமாண்டர் கைது
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரத்தில் கலபுரகி ஆயுதப்படை கமாண்டர் கைது செய்யப்பட்டு உள்ளார். மேலும் ஆள்சேர்ப்பு பிரிவில் பணியாற்றிய 12 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
கலபுரகி:போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் தேர்வு முறைகேடு விவகாரத்தில் கலபுரகி ஆயுதப்படை கமாண்டர் கைது செய்யப்பட்டு உள்ளார். மேலும் ஆள்சேர்ப்பு பிரிவில் பணியாற்றிய 12 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
ஆயுதப்படை கமாண்டர் கைது
கர்நாடகத்தில் 545 சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கு நடந்த தேர்வில் முறைகேடு நடந்தது குறித்து சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் போலீஸ்காரர்கள், பா.ஜனதா பெண் பிரமுகர், காங்கிரஸ் பிரமுகர்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கில் கைதான ருத்ரேகவுடாவிடம் சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த விசாரணையின்போது சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் துணை போலீஸ் சூப்பிரண்டான சாந்தகுமார், அவரது நண்பரும், கலபுரகி ஆயுதப்படை கமாண்டரான வைஜூநாத் ரேவூர் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து விசாரணைக்கு ஆஜராக வைஜூநாத் ரேவூருக்கு நேற்று முன்தினம் சி.ஐ.டி. போலீசார் நோட்டீசு அனுப்பி இருந்தனர். அதன்படி விசாரணைக்கு ஆஜரான வைஜூநாத்திடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது தேர்வு முறைகேட்டில் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
12 பேர் பணியிட மாற்றம்
இந்த நிலையில் தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் சில துணை போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ்காரர்களிடம் விசாரணை நடத்தவும் சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்து உள்ளனர். மேலும் ஆள்சேர்ப்பு பிரிவு டி.ஜி.பி.யாக இருந்த அம்ருத்பாலின் உதவியாளருக்கு இந்த தேர்வு முறைகேட்டில் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் அம்ருத்பாலிடமும், சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தலாம் என்று கூறப்படுகிறது. இந்த தேர்வு முறைகேடு விவகாரத்தில் அம்ருத்பால் பணியிட மாற்றமும் செய்யப்பட்டு இருந்தார். இதன்பின்னர் ஆள்சேர்ப்பு பிரிவு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்ட ஹிதேந்திரா, ஆள்சேர்ப்பு பிரிவில் சில முக்கிய மாற்றங்கள் செய்ய முடிவு செய்தார். அதன்படி ஆள்சேர்ப்பு பிரிவில் பணியாற்றிய 16 போலீஸ்காரர்களில் 12 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
40 தேர்வு மையங்களில்...
மேலும் கலபுரகியில் முறைகேடு நடந்த 2 தேர்வு மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 13 போலீஸ்காரர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையே இந்த வழக்கில் கைதான துணை போலீஸ் சூப்பிரண்டு மல்லிகார்ஜூன், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த் ஆகியோர் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த தேர்வு 92 மையங்களில் நடந்து இருந்தது. அதில் 40 மையங்களில் முறைகேடு நடந்து இருக்கலாம் என்று சி.ஐ.டி. போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளதால் அந்த மையங்களுக்கு சென்று விசாரணை நடத்தவும் முடிவு செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story