கோலார் அரசு ஆஸ்பத்திரியில் மாநில சட்ட சேவை ஆணைய தலைவர் வீரப்பா ஆய்வு
கோலாரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் கால்நடைகளை போல் அவமரியாதையாக நடத்தப்படுவதாக மாநில சட்ட சேவை ஆணைய தலைவர் வீரப்பா வேதனையுடன் கூறினார்.
கோலார் தங்கவயல்: கோலாரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் கால்நடைகளை போல் அவமரியாதையாக நடத்தப்படுவதாக மாநில சட்ட சேவை ஆணைய தலைவர் வீரப்பா வேதனையுடன் கூறினார்.
சட்ட சேவை ஆணைய தலைவர்
கோலார் டவுனில் அரசு எஸ்.என்.ஆர். ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அலட்சியமாக நடந்து கொள்வதாகவும் கூறப்படுகிறது.
இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. இந்த நிலையில் நேற்று மாநில சட்ட சேவை ஆணைய தலைவர் வீரப்பா திடீரென கோலார் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவர் ஆஸ்பத்திரி வளாகத்தை சுற்றிப்பார்த்தார்.
குறைகளை கேட்டறிந்தார்
பின்னர் நோயாளிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். மேலும் அவர்கள் அளித்த கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார். அதையடுத்து டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது ஆஸ்பத்திரியில் உள்ள வசதிகள், மருந்து - மாத்திரைகள் இருப்பு, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான உபகரணங்கள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் நோயாளிகளுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களுக்கு அவர் உத்தரவிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆணையத்தின் மூலமே நடவடிக்கை
நோயாளிகளுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்க அரசு கோடிக்கணக்கில் செலவு செய்து வருகிறது. ஆனால் டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் நோயாளிகளை அவமரியாதையாக நடத்துகிறார்கள். அவர்கள் நோயாளிகளை கால்நடைகளை போல் நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி விசாரணை நடத்தப்படும். அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் விலங்குகள் அல்ல. அவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும்.
ஆஸ்பத்திரியில் ஊழியர்கள் நடந்து கொள்ளும் விதமும், அவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் விதமும் எனக்கு திருப்தி அளிக்கவில்லை. மேலும் ஆஸ்பத்திரி சுகாதாரமாகவும், அடிப்படை வசதிகள் இன்றியும் காணப்படுகிறது. இதுகுறித்து அரசுக்கு அறிக்கை அளிப்பேன். அரசு நடவடிக்கை எடுக்காமல் இருந்தால், ஆணையத்தின் மூலமே நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story