கடன் அட்டை மூலம் பெண்ணிடம் பண மோசடி


கடன் அட்டை மூலம் பெண்ணிடம் பண மோசடி
x
தினத்தந்தி 8 May 2022 3:07 AM IST (Updated: 8 May 2022 3:07 AM IST)
t-max-icont-min-icon

கடன் அட்டை மூலம் பெண்ணிடம் பண மோசடி 2பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகர்கோவில்:
நாகர்கோவிலில் கடன் அட்டை மூலம் பெண்ணிடம் பண மோசடி செய்தது தொடர்பாக 2 பேரை பிடித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடன் அட்டை
வில்லுக்குறி அருகே சரல்விளை பகுதியை சேர்ந்த அய்யப்பன் மனைவி ஜெயக்குமாரி (வயது 43). இவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்று அளித்தார்.
அதில் கூறியிருப்பதாவது:-
கடந்த அக்டோபர் மாதம் எனது உறவினரான வில்லுக்குறி பகுதியை சேர்ந்த சிவா (26) என்பவருடன் சேர்ந்து நாகர்கோவிலில் உள்ள ஒரு கடைக்கு செல்போன் வாங்க சென்றேன். அந்த கடையில் தனியார் நிதி நிறுவன கடன் அட்டை (இ.எம்.ஐ.கார்டு) மூலம் செல்போன் வாங்கினேன். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் சம்பந்தப்பட்ட தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து நீங்கள் ரூ.22 ஆயிரத்துக்கு பிரபல ஜவுளிக் கடையில் துணி எடுத்துள்ளீர்கள். அதற்கான கட்டணத்தை கடந்த 2 மாதங்களாக செலுத்தவில்லை எனவும் பணத்தை உடனே செலுத்தும் படியும் நிதி நிறுவன ஊழியர்கள் எனது வீட்டிற்கு வந்து எச்சரித்தனர்.
பெண்ணிடம் மோசடி
இதனால் அதிர்ச்சி அடைந்த நான் அவர்களிடம் "கடன் அட்டை மூலம் துணிக்கடையில் எந்த ஒரு துணியும் எடுக்கவில்லை" என கூறினேன். அப்போது மர்மநபர்கள் எனது கடன் அட்டையை பயன்படுத்தி பொருட்கள் வாங்கி பண மோசடி செய்தது தெரியவந்தது. எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில் இதுதொடர்பாக அந்த பெண்ணின் உறவினர் உள்பட 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story