தமிழக அரசின் ஈரோடு மாவட்டத்தில் ஓராண்டு சாதனை மலர்- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டார்


தமிழக அரசின் ஈரோடு மாவட்டத்தில் ஓராண்டு சாதனை மலர்- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டார்
x
தினத்தந்தி 8 May 2022 3:27 AM IST (Updated: 8 May 2022 3:27 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசின் ஈரோடு மாவட்டத்தில் ஓராண்டு சாதனை மலரினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டார்.

ஈரோடு
தமிழக அரசின் ஈரோடு மாவட்டத்தில் ஓராண்டு சாதனை மலரினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டார். 
ஓராண்டு சாதனை மலர்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைவதையொட்டி, ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ‘ஓராண்டில் அரசின் அரும்பணிகளின் அணிவகுப்பு” என்ற தலைப்பில் ஈரோடு மாவட்டத்தின் தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனை மலர் வெளியிட்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கலந்து கொண்டு சாதனை மலரை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவுபெறுவதையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் ஓராண்டு சாதனை மலர் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சர் பதவியேற்றவுடன், தமிழக மக்கள் தங்கள் வாழ்வில் வளம்பெரும் வகையில் 5 திட்டங்களின் கோப்புகளில் கையெழுத்திட்டு, அதனை சிறப்பாக செயல்படுத்தினார்.
கொரோனா தடுப்பூசி
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் கட்டணமில்லா பஸ் பயணத்திட்டத்தின் கீழ் 4 கோடியே 30 லட்சம் பெண்களும், 25 ஆயிரத்து 45 திருநங்கைகளும், 2 லட்சத்து 33 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளும் பயனடைந்துள்ளனர். மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் 9 லட்சத்து 83 ஆயிரம் பேர்களுக்கு 83 ஆயிரத்து 670 நோய்கள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கலைஞரின் வரும்முன் காப்போம் என்ற திட்டத்தின் கீழ் கடந்த ஓராண்டில் 44 முகாம்கள் நடத்தப்பட்டு 35 ஆயிரத்து 869 பேர் பயனடைந்துள்ளனர்.
இன்னுயிர் காப்போம் -நம்மைக்காக்கும் 48 திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட 6 அரசு ஆஸ்பத்திரி மற்றும் 36 தனியார் மருத்துவமனைகளில் 729 பேர் சேர்க்கப்பட்டு ரூ.1 கோடியே 2 லட்சம் மதிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று காலத்தில் பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் 18 வயதிற்கு மேற்பட்ட 27 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கும், 5 முதல் 18 வயதிற்குட்பட்ட 1 லட்சத்து 54 ஆயிரம் பேருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
நலத்திட்ட உதவிகள்
முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 21 ஆயிரத்து 176 பேருக்கு ரூ.58 கோடியே 20 லட்சம் செலவில் காப்பீட்டு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா சிறப்பு நிவாரண உதவியாக அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4 ஆயிரமும், 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பும் நிவாரணமாக வழங்கப்பட்டது.
கொரோனா தடுப்புப் பணியில் கடமையாற்றிய டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் போலீஸ் துறையினர், ஊடகத்துறையினர் உட்பட முன்களப்பணியாளர்கள் 2 ஆயிரத்து 686 பேருக்கு ரூ.2 கோடியே 62 லட்சம் மதிப்பில் நிவாரணம் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், உங்கள் தொகுதியில் முதல் -அமைச்சர் திட்டத்தின் கீழ் 240 பேருக்கு ரூ.5 கோடியே 28 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 3 ஆயிரத்து 374 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான ரூ.79 கோடியே 12 லட்சம் மதிப்பில் கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஓய்வூதியம்
மேலும், விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளையம் மின்பகிர்மான வட்டத்தில் ரூ.5 கோடியே 9 லட்சம் செலவில் 3 ஆயிரத்து 62 பேருக்கு புதிய மின்இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் 84 ஆயிரத்து 521 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டு, 6 ஆயிரத்து 501 தன்னார்வலர்கள் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு பயனடைந்துள்ளனர். சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 9 ஆயிரத்து 878 பேருக்கு ரூ.4 கோடியே 25 லட்சம் மதிப்பில் பல்வேறு ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது.
173 முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கான ஓய்வூதியம் ரூ.10 லட்சத்து 38 ஆயிரம்  மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையாக 5 ஆயிரத்து 796 பேருக்கு ரூ.10 கோடியே 43 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் திருமண நிதி மற்றும் கல்வி உதவித்தொகையாக 239 பேருக்கு ரூ.13 லட்சம் மதிப்பில் நிதி உதவியும், 103 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.23 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பில் பல்வேறு உதவி உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இணைப்பு சாலை
திருமண நிதி உதவியுடன் 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 4 ஆயிரத்து 99 பெண்களுக்கு ரூ.16 கோடியே 58 லட்சம் திருமண நிதி உதவியும், ரூ.15 கோடியே 55 லட்சம் மதிப்பில் தாலிக்கு தங்கமும் வழங்கப்பட்டுள்ளது. ஆவின் பால் விலை ரூ.3 குறைத்ததன் மூலம், 7 லட்சத்து 59 ஆயிரம் ஏழை தாய்மார்கள் பயனடைந்துள்ளனர். தொழிலாளர் நலத்துறையின் சார்பில் 6 ஆயிரத்து 202 பேருக்கு ரூ.5 கோடியே 22 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் அந்தியூர் அருகே உள்ள கத்திரிப்பட்டி வன எல்லை பகுதியில் 8 சாலைப்பணிகள் 12½ கிலோ மீட்டர் நீளத்தில் ரூ.2 கோடியே 88 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டிலும், 2 சிறுபாலங்கள் அமைக்கும் பணிகள் ரூ.68 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பீட்டிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வெள்ளித்திருப்பூர் ஊராட்சியில் 3½ கிலோ மீட்டர் நீளத்தில் ரூ.66 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பீட்டில் மலைப்பகுதி கிராமங்களை இணைக்கும் இணைப்புச்சாலை பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சாதிச்சான்றிதழ்
பர்கூர் ஊராட்சி ஒன்னக்கரை முதல் முத்தூர் வனச்சாலை வரை ரூ.41 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பீட்டில் ஊரக இணைப்புச்சாலை அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோபி வருவாய் கோட்டத்தில் 1,190 பேருக்கு பழங்குடியினர் சாதிச்சான்றுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து துறைகளின் சார்பில் எண்ணற்ற திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, மகளிர் திட்ட இணை இயக்குனர் கெட்சி லீமா அமலினி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Next Story