சேலத்தில் திருட சென்ற வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணின் அழகை பார்த்து ரசித்த திருடன் கைது
சேலத்தில் திருட சென்ற இடத்தில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணின் அழகை பார்த்து ரசித்த திருடன், போலீசில் சிக்கினான்.
சேலம்:
சேலத்தில் திருட சென்ற இடத்தில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணின் அழகை பார்த்து ரசித்த திருடன், போலீசில் சிக்கினான்.
தப்பி ஓட முயற்சி
சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது வீட்டில், நேற்று காலை திடீரென திருடன்..! திருடன்..! என்று சத்தம் போட்டு கூச்சலிட்டார். இதை கேட்டு அவரது கணவர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து எங்கே திருடன் என்று பார்த்தனர். அப்போது, அந்த பெண்ணின் வீட்டில் இருந்து ஒருவர் தப்பி ஓட முயன்றார். இதனால் அவரை அந்த பகுதி பொதுமக்கள் விரட்டி துரத்தி பிடித்தனர்.
இது குறித்து சூரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது, திடீரென அந்த நபருக்கு வலிப்பு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை ஏற்றி சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
பிரபல திருடன்
போலீசில் சிக்கிய நபர் வாழப்பாடி நீர்முள்ளிகுட்டையை சேர்ந்த பிரபல திருடன் சின்னராசா (வயது 34) என்பதும், அவர் மீது 17 திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
ஒரு திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் இருந்து வெளியே வந்த சின்னராசா, தற்போது வீடு புகுந்தபோது மாட்டிக்கொண்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கன்னத்தில் கை வைத்தபடி...
தொடர்ந்து சூரமங்கலத்தை சேர்ந்த சம்பந்தப்பட்ட பெண்ணிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது, அவர் போலீசாரிடம் கூறும்போது, வீட்டிற்குள் நான் தூங்கி கொண்டிருந்தபோது, எனது கன்னத்தில் கை வைத்தபடி யாரோ பார்த்து கொண்டிருப்பதை உணர்ந்தேன். அந்த சமயத்தில் தூக்க கலக்கத்தில் எழுந்து பார்த்தபோது, வீட்டிற்குள் புகுந்த நபர், என்னையே பார்த்து ரசித்தபடி அமர்ந்திருந்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் திருடன்.. திருடன்.. என்று கத்தியபோது அவன் வெளியே தப்பி ஓட முயன்றான். பின்னர் அவனை பொதுமக்கள் பிடித்துவிட்டனர், என்று தெரிவித்துள்ளார். இருப்பினும், வீட்டிற்குள் சின்னராசா புகுந்து திருட முயன்றாரா? என்பது குறித்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலத்தில் வீடு புகுந்த திருடன் தூங்கி கொண்டிருந்த பெண்ணின் அழகை பார்த்து ரசித்து கொண்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story