சேலம் மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 6.85 லட்சம் பயனாளிகளுக்கு சிகிச்சை-ஓராண்டு சாதனை மலரை வெளியிட்டு கலெக்டர் தகவல்
சேலம் மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை 6.85 லட்சம் பயனாளிகளுக்கு 5 வகையான நோய்கள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என ஓராண்டு சாதனை மலரை வெளியிட்டு கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை 6.85 லட்சம் பயனாளிகளுக்கு 5 வகையான நோய்கள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என ஓராண்டு சாதனை மலரை வெளியிட்டு கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார்.
சாதனை மலர்
தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. அரசு பதவியேற்று நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது. இதையொட்டி சேலம் அருகே கன்னங்குறிச்சியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகளை நேற்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் மருத்துவத் திட்ட செயல்பாடுகள் குறித்து அலுவலர்களுடன் கேட்டறிந்தார்.
தொடர்ந்து தமிழக அரசின் ஓராண்டு சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த சிறப்பு மலரை கலெக்டர் கார்மேகம் வெளியிட்டார். அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வம், சுகாதார பணிகள் துணை இயக்குனர் நளினி, கன்னங்குறிச்சி பேரூராட்சி தலைவர் குபேந்திரன், பேரூராட்சி செயல் அலுவலர் லாரன்ஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
கலெக்டர் பேட்டி
சேலம் மாவட்டத்தில் ஓராண்டு சாதனை திட்டங்கள் குறித்து கலெக்டர் கார்மேகம் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசின் முதன்மை திட்டமாக மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் 6 லட்சத்து 85 ஆயிரத்து 308 பயனாளிகளுக்கு 5 வகையான நோய்கள் கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர்.
இதுதவிர சேலம் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் முகவரி திட்டத்தின் கீழ் 23 ஆயிரத்து 965 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு 23 ஆயிரத்து 965 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
நகைக்கடன் தள்ளுபடி
இலவச வீட்டுமனைப்பட்டா, மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கடனுதவி, சுயதொழில் தொடங்குவதற்கு கடனுதவி என ரூ.52.67 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு 5,549 நபர்கள் பயன் அடைந்துள்ளனர். அதேபோல், இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 20 ஆயிரத்து 599 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டு 10 ஆயிரத்து 587 பெண் தன்னார்வலர்கள் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு பயனடைந்துள்ளனர்.
கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 364 பயனாளிகளுக்கு ரூ.483.28 கோடி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட 7 அரசு மருத்துவமனைகள் மற்றும் 16 தனியார் மருத்துவமனைகளில் விபத்தில் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 64 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பயனடைந்துள்ளனர். ஆவின் பால் விலை குறைப்புத் திட்டத்தின் கீழ் ஆவின் பால் விலை விட்டர் ஒன்றுக்கு ரூ.3 குறைப்பு மூலம் 2 லட்சத்து 75 ஆயிரம் நுகர்வோர் பயனடைந்துள்ளனர்.
சிறப்பு நிவாரணம்
விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.19.77 கோடியில் புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு 3,963 விவசாயிகளும், கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ் 50 முகாம்கள் நடத்தப்பட்டு 16 நோய்களுக்கான சிகிச்சைகள் மூலம் 29 ஆயிரத்து 123 பேரும், கொரோனா சிறப்பு நிவாரண உதவியாக 10 லட்சத்து 19 ஆயிரத்து 458 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வீதம் ரூ.407.78 கோடியும் வழங்கப்பட்டு பயனடைந்துள்ளனர்.
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ஆத்தூர், மேட்டூர், எடப்பாடி மற்றும் நரசிங்கபுரம் நகராட்சிகளில் தார்சாலை, பேவர் பிளாக் சாலைகள், புதிய பூங்காக்கள், நவீன எரிவாயு தகனமேடை அமைக்கும் பணிகள் என மொத்தம் ரூ.11.37 கோடி மதிப்பீட்டிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு கலெக்டர் கார்மேகம் கூறினார்.
Related Tags :
Next Story