‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 8 May 2022 3:41 AM IST (Updated: 8 May 2022 3:41 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

‘தினத்தந்தி’க்கு பாராட்டு

சேலம் மாநகராட்சி குப்தா நகர் பகுதியில் போதிய குடிநீர் வசதி இன்றி பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதனால் தினமும் குடிநீர் சீராக வழங்க ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதையடுத்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் அந்த பகுதி பொதுமக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கண்டனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய ‘தினத்தந்தி’க்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

-ஜான், குப்தாநகர், சேலம்.
===
மழையால் துண்டிக்கப்பட்ட சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த நரிக்கானூர் கிராமத்தில் இருந்து விசுவாசம்பட்டி வரை உள்ள தார்ச்சாைல கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெய்த கன மழையில் அடித்து செல்லப்பட்டது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மழையால் துண்டிக்கப்பட்ட இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தருண், நரிக்கானூர், கிருஷ்ணகிரி.
===
ஆக்கிரமிப்பு அகற்றப்பட வேண்டும்

தர்மபுரி நகரின் மையப்பகுதியில் ஓடும் சனத்குமார் நதி கால்வாய் மூலம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு இடங்களில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. ஆனால் தற்போது இந்த கால்வாய் உரிய பராமரிப்பின்றி கழிவு நீர் செல்லும் சாக்கடையாக மாறி உள்ளது. இந்த கால்வாயில் இரு பகுதிகளிலும் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. எனவே இந்த கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜேந்திரன், தர்மபுரி.
===
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பாலப்பாளையம் கிராமத்தில் பெண்கள் சுகாதார வளாகம் உள்ளது. இதில் தண்ணீர் வசதி  இல்லை. இதனால் பெண்கள் வீடுகளில் இருந்து தண்ணீர் எடுத்து சென்று பயன்படுத்தி வருகின்றனர். இது சம்பந்தமாக நிர்வாகத்திடம் பலமுறை எடுத்து கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சுகாதார வளாகத்திற்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

-பரத், பாலப்பாளையம், நாமக்கல்.
====
கால்நடைகள் தொல்லை

சேலம் தேர்வீதி, சின்னகடை பகுதிகளில் மாடு, ஆடு, குதிரை தொல்லை அதிகமாக காணப்படுகின்றன. இவை சாலையில் சர்வ சாதாரணமாக நடமாடுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி ஆடு, மாடு, குதிரைகள் சாலையில் நடமாடுவதை தடுக்க  சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வேலாயுதம், அம்மாபேட்டை, சேலம்.
===
சாலையை ஆக்கிரமித்த ஆட்டோக்கள்

ஆத்தூர் பெரியார் சிலை முன்பு சாலையோரம் ஆட்டோக்களை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். பொதுமக்களின் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை ஆக்கிரமித்துள்ள வாகனங்களை அகற்ற வேண்டும்.

-நந்தினி, ஆத்தூர்.
===
ஏரியை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை

சேலம் சூரமங்கலம் அடுத்த போடிநாயக்கன்பட்டியில் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி முழுவதும் ஆகாயத்தாமரை ஆக்கிரமித்து உள்ளதால் ஏரியை சுற்றி இருக்கும் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் விரைவாக நடவடிக்கை எடுத்து ஏரியை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரையை தூர்வாரி அகற்ற வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

-நாராயணன், போடிநாயக்கன்பட்டி, சேலம்.
====
நோய் பரவும் அபாயம்

சேலம் மாநகராட்சி 12-வது வார்டுக்குட்பட்ட மணக்காடு காமராஜர் மகளிர் பள்ளி பின்புறம் பன்றிகள் அதிகளவில் சுற்றித்திரிந்து வருகின்றன. மேலும் அங்கு கொட்டப்படும் குப்பை கழிவுகளில் கிடக்கும் உணவு பொருட்களை பன்றிகள் தின்பதால் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவிகள், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் முகம் சுழித்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. நோய் பரவும் அபாயம் உள்ளதால் பன்றிகளை பிடித்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மணிமாறன், மணக்காடு, சேலம்.
====

Next Story