2,262 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்-கலெக்டர் திவ்யதர்சினி நேரில் ஆய்வு
தர்மபுரி மாவட்டம் முழுவதும் இன்று ஒரே நாளில் 2,262 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. ஒட்டப்பட்டி, புலிக்கரை ஆகிய இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களை கலெக்டர் திவ்யதர்சினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் முழுவதும் இன்று ஒரே நாளில் 2,262 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. ஒட்டப்பட்டி, புலிக்கரை ஆகிய இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களை கலெக்டர் திவ்யதர்சினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தடுப்பூசி முகாம்
தமிழ்நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்திட தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை நடத்த தமிழக அரசின் சுகாதாரத்துறை இலக்கு நிர்ணயித்து இருந்தது.
அதன்படி பெருந்தொற்று பரவலை முழுமையாக கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் தடுப்பூசி முகாம்கள் இன்று நடைபெற்றன. தர்மபுரி மாவட்டம் முழுவதும் இன்று ஒரே நாளில் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு முகாம்கள், பள்ளி வளாகங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், வாரச்சந்தைகள், மார்க்கெட்டுகள் உள்பட 2,262 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை நடைபெற்ற இந்த சிறப்பு முகாம்களில் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள், 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
கலெக்டர் ஆய்வு
இதேபோன்று 2 தவணை தடுப்பூசி எடுத்து கொண்டவர்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். மாற்றுத் திறனாளிகள், வயது முதிர்ந்தோர் மற்றும் நடக்க முடியாதவர்களுக்கு வீட்டிற்கே சென்று தடுப்பூசி போட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி, தர்மபுரியை அடுத்த ஒட்டப்பட்டி, புளிக்கரை ஆகிய இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் திடீரென ஆய்வு செய்தார். இதே போன்று மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சிறப்பு முகாம்களில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.