தர்மபுரியில் அசைவ ஓட்டல்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
தர்மபுரியில் உள்ள அசைவ ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
தர்மபுரி:
தர்மபுரியில் உள்ள அசைவ ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதிகாரிகள் ஆய்வு
கேரளாவில் 'ஷவர்மா' சாப்பிட்ட பள்ளி மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 17 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் 'ஷவர்மா' சாப்பிட்ட கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 3 பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் 3 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பிரியாணி சாப்பிட்ட 40-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
இதுபோன்ற தொடர் சம்பவங்களால், தமிழகம் முழுவதும் உள்ள சிக்கன் 'ஷவர்மா' துரித உணவு கடைகள் உள்ளிட்ட அசைவ ஓட்டல்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள உணவு பாதுகாப்பு துறை மாநில ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.
அதன்பேரில் கலெக்டர் திவ்யதர்சினி அறிவுறுத்தலின் பேரில் தர்மபுரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அசைவ ஓட்டல்களில் திடீர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
தர்மபுரியில் சிக்கன் 'ஷவர்மா', கிரீல்டு சிக்கன் கடைகள் மற்றும் அசைவ துரித உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறையின் தர்மபுரி மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ஏ.பானுசுஜாதா தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகோபால், குமணன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
குறிப்பாக தர்மபுரி நேதாஜி பைபாஸ் ரோடு, நாச்சியப்ப கவுண்டர் தெரு, அப்துல் முஜிப் தெரு, அண்ணாதுரை ரோடு, வெண்ணாம்பட்டி ரோடு, இலக்கியம்பட்டி, ஒட்டப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
அபராதம்
இந்த ஆய்வின் போது 3 கடைகளில் நாள்பட்ட பழைய, கெட்டுப்போன 'ஷவர்மா', குளிர்பதன பெட்டியில் வைத்திருந்த சமைத்த, பொறித்த இறைச்சி மற்றும் செயற்கை நிறமேற்றிய இறைச்சி என சுமார் 20 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
மேலும் ஒரு கடைக்கு ரூ.2 ஆயிரம் மற்ற 2 கடைகளுக்கு தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. இதுதவிர காலாவதியான குளிர்பானங்கள், பால் பாக்கெட்டுகள் மற்றும் செயற்கை நிறமேற்றிகள் பறிமுதல் செய்து அகற்றப்பட்டன.
துரித உணவகங்கள் உள்பட அசைவ ஓட்டல்களில் நாள்பட்ட இறைச்சிகள் உபயோகம் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். சமைத்த உணவு மற்றும் சமைத்த இறைச்சிகளை குளிர்பதன பெட்டியில் (பிரிட்ஜ்) வைத்து பயன்படுத்த கூடாது. இறைச்சிகளில் செயற்கை நிறமேற்றிகள் அறவே உபயோகப்படுத்த கூடாது, 'ஷவர்மா'வை நன்றாக வேக வைக்கவேண்டும். அதில் தடவும் வெண்ணெய் போன்றவை தரமானதாக இருக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.