காரிமங்கலம் அருகே அரசு கல்லூரி மாணவிகள் ஆபத்தான பயணம்-பஸ் படிக்கட்டில் தொங்கியபடி செல்லும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியது
காரிமங்கலம் அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள் அரசு பஸ் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காரிமங்கலம்:
காரிமங்கலம் அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள் அரசு பஸ் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரசு கல்லூரி மாணவிகள்
காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளி பகுதியில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பி.ஏ. தமிழ் மற்றும் ஆங்கிலம், வரலாறு, பி,காம்., பி.பி.ஏ., பி.எஸ்சி., கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், காட்சி தொடர்பு ஊடகவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.
தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாணவிகள் இந்த கல்லூரியில் படித்து வருகின்றனர். மேலும் காரிமங்கலம் பஸ் நிலையத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் தர்மபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் இந்த கல்லூரி அமைந்துள்ளது.
ஒரு சில குறிப்பிட்ட டவுன் பஸ்கள் மட்டுமே நின்று செல்கின்றன. இதனால் அந்த சில பஸ்களில் மாணவிகள் முண்டியடித்துக்கொண்டு ஏறி பயணம் செய்கின்றனர். கல்லூரி நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க பல முறை கோரிக்கை விடுத்தும், புதிய பஸ்கள் இயக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
சமூக வலைத்தளத்தில் பரவியது
இதனால் கல்லூரி முடிந்து தர்மபுரி செல்லும் பஸ் ஒன்றில் கனரக வாகனங்களுக்கு மத்தியில் பஸ் படிக்கட்டில் மாணவிகள் தொங்கியபடி ஆபத்தான பயணத்தை நாள்தோறும் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று கல்லூரியில் இருந்து தர்மபுரி நோக்கி சென்ற பஸ்சில் மாணவிகள் தொங்கியபடி சென்ற காட்சியை செல்போனில் படம் பிடித்த நபர் ஒருவர் அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கல்லூரி நேரத்தில் கூடுதல் பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.