நகை அடகு கடை சுவற்றை துளையிட்டு 5 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் கொள்ளை எருமப்பட்டி அருகே துணிகரம்


நகை அடகு கடை சுவற்றை துளையிட்டு 5 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் கொள்ளை எருமப்பட்டி அருகே துணிகரம்
x
தினத்தந்தி 8 May 2022 6:47 PM IST (Updated: 8 May 2022 6:47 PM IST)
t-max-icont-min-icon

நகை அடகு கடை சுவற்றை துளையிட்டு 5 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் கொள்ளை எருமப்பட்டி அருகே துணிகரம்

எருமப்பட்டி:
எருமப்பட்டி அருகே நகை அடகு கடையின் சுவற்றை துளையிட்டு 5 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் கொள்ளையடித்து சென்ற துணிகர சம்பவம் நடந்துள்ளது.
நகை அடகு கடை
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருேக உள்ள வரகூரை சேர்ந்தவர் பாலாஜி (வயது 40). இவர் பவித்திரம் பகுதியில் கோல்டன் என்ற பெயரில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் நாமக்கல் கொசவம்பட்டியை சேர்ந்த சசிகலா என்பவர் கணக்காளராக பணியாற்றி வருகிறார். இரவு காவலாளியாக பவித்திரத்தை சேர்ந்த விஜயகுமார் (65) என்பவர் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பாலாஜி சொந்த விஷயமாக சென்னை சென்றார். இதனால் சசிகலா கடையை கவனித்து வந்தார். அதன்படி நேற்று முன்தினம் இரவு சசிகலா வழக்கம்போல் பணியை முடித்து கடையை பூட்டு விட்டு சென்றார். நகை அடகு கடை அருகே தனியார் கிளினிக் செயல்பட்டு வருகிறது.
கொள்ளை
இந்த நிலையில் இரவு சுமார் 1 மணி அளவில் மர்ம நபர்கள் சிலர் தனியார் கிளினிக்கின் பின்புறமாக ஏறி கதவை உடைத்து கிளினிக்கிற்குள் நுழைந்தனர். பின்னர் அங்கிருந்து நகை அடகு கடையின் சுவற்றை எந்திரம் மூலம் துளையிட்டு கடைக்குள் நுழைந்துள்ளனர்.
இதையடுத்து கடையில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள் அங்கிருந்த லாக்கரை உடைக்க முயன்றனர். அப்போது இரவு பணியில் இருந்த காவலாளி விஜயகுமார் கடையினுள் சத்தம் கேட்பதை அறிந்தார். பின்னர் அவர் சத்தம் போடவே கடையில் இருந்த மர்ம நபர்கள் லாக்கரை உடைக்கும் முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுதொடர்பாக அவர் உடனடியாக எருமப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
விசாரணை
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், எருமப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) குமரவேல் பாண்டியன், எருமப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் பூபதி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் துளையிட்ட பகுதி, கிளினிக் ஆகியவற்றை பார்வையிட்டனர். 
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கிளினிக் பின்புறம் குட்டை ஒன்று உள்ளதும், தற்போது அதில் தண்ணீர் தேங்கி உள்ளது. ஆனால் அந்த பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்வதில்லை என்று தெரிகிறது. இதனை சாதகமாக பயன்படுத்திய மர்மநபர்கள் கிளினிக் வழியாக ஏறி துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.  இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story