தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
நடவடிக்கை எடுக்கப்பட்டது
கிருஷ்ணன்கோவில் கைலாஷ் கார்டன் 2-வது தெருவில் ஒரு மின்கம்பத்தில் சுவிட்ச் பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. அது பழுதடைந்து, மூடி திறந்த நிலையில் குழந்தைகளுக்கு எளிதாக எட்டும் வகையில் ஆபத்தான நிலையில் இருந்தது. இதுகுறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. உடனே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிய சுவிட்ச் பெட்டி அமைத்தனர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
அகற்றப்படாத கழிவுகள்
பத்மநாபபுரம் நகராட்சியில் 7-வது வார்டில் இலுப்பக்கோணம் பகுதியில் உள்ள மழைநீர் வடிகாலில் கழிவுகள், மண் போன்றவை நிறைந்து காணப்பட்டது. அவற்றை தூர்வாரி வடிகாலில் கரையோரம் குவித்து வைத்தனர். நீண்ட நாட்கள் ஆகியும் அந்த கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் கழிவுகள் மீண்டும் மழைநீர் வடிகாலில் விழுந்த வண்ணம் உள்ளது. மேலும் போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ளது. எனவே, சாலையோரம் குவிக்கப்பட்டுள்ள கழிவுகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
-ஜி.சுரேஷ், இலுப்பக்கோணம்.
சேதமடைந்த மின்கம்பம்
உண்ணாமலைக்கடை பேரூராட்சி 5-வது வார்டு பயணம் சந்திப்பில் உள்ள ஒரு மின்கம்பம் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்த நிலையில் காணப்படுகிறது. மின்கம்பத்தின் கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே பேராபத்து ஏற்படும் முன்பு சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் நடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.சத்தியாபால், பயணம்.
புழுதி பறக்கும் சாலை
நாகர்கோவில் மாநகராட்சியில் வேப்பமூட்டில் இருந்து செட்டிகுளம் செல்லும் சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டது. அதன்பின்பு சாலையை சீரமைக்கவில்லை. தற்போது அந்த பகுதியில் வாகனங்கள் செல்லும் போது தூசும், புழுதியும் பறக்கிறது. இதனால், நடந்து செல்கிறவர்களும், வாகனங்களில் செல்கிறவர்களும் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, சாலையில் புழுதி பறப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
சிவசங்கர், நாகர்கோவில்.
சாலையை சீரமைக்க வேண்டும்
திருவட்டார் தாலுகாவில் கல்லடிமாமூடு - அண்டூர் சாலையில் மண்விளை பகுதியில் பல இடங்களில் சாலை சேதமடைந்து அகலம் குறைவாக உள்ளது. அத்துடன் குடிநீர் குழாய்கள் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழிகள் சரியான முறையில் மூடப்படாமல் உள்ளன. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்கள் அடிக்கடி தவறி விழுந்து விபத்தில் சிக்கி வருகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜஸ்டின் ஜாஸ்ப்பர், மண்விளை.
சாலையின் நடுவில் மின்கம்பம்
உண்ணாமலைக்கடையில் இருந்து தாணிமூடு கோவிலுக்கு ஒரு சாலை செல்கிறது. இந்த சாலையில் ஆயிரம்தெங்கு பகுதியில் சாலையின் நடுவே ஒரு மின்கம்பம் நிற்கிறது. இதனால், அந்த வழியாக வாகனங்கள் செல்லும் போது இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே, சாலையில் நிற்கும் மின்கம்பத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ராஜன், கொடுங்குளம்.
Related Tags :
Next Story