வெயிலுக்கு இடையே சுற்றுலா தலங்களில் குவிந்த மக்கள்


வெயிலுக்கு இடையே சுற்றுலா தலங்களில் குவிந்த மக்கள்
x
தினத்தந்தி 8 May 2022 7:16 PM IST (Updated: 8 May 2022 7:16 PM IST)
t-max-icont-min-icon

கோடை வெயிலுக்கு மத்தியில் திற்பரப்பு, மாத்தூர் போன்ற சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதையடுத்து திற்பரப்பில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

திருவட்டார், 
கோடை வெயிலுக்கு மத்தியில் திற்பரப்பு, மாத்தூர் போன்ற சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதையடுத்து திற்பரப்பில் வாகன நெரிசல் ஏற்பட்டது.
கோடை வெயில்
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. ஆனாலும் சுற்றுலா தலங்களில் விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் தற்போது மிதமான அளவு தண்ணீர் கொட்டுகிறது.  திற்பரப்பில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவியிலும், நீச்சல்குளத்திலும் குளித்து மகிழ்ந்தனர். மேலும் அருவியின் மேல் பகுதியில் உள்ள தடுப்பணையில் உல்லாச படகு சவாரி செய்தனர். 
சுற்றுலா பயணிகளின் வருகையால் அங்குள்ள கடைகளில் வியாபாரம் படுஜோராக நடந்தது. 
போக்குவரத்து நெரிசல்
ஏராளமான சுற்றுலா பயணிகள் பஸ், வேன், கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்ததால் திற்பரப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 
இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் உடமைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்று புகார் எழுந்துள்ளது. எனவே, திற்பரப்பில் மூடிக்கிடக்கும் புறக்காவல் நிலையத்தை திறந்து போதிய போலீசாருடன் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாத்தூர் தொட்டிப்பாலம்
ஆசியாவிலேயே உயரமான மாத்தூர் தொட்டிப்பாலத்திலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இங்கு வந்த சுற்றுலா பயணிகள் தொட்டிப்பாலத்தின் ஒரு முனையில் இருந்து மறுமுனை வரை நடந்து சென்று சுற்றி வளர்ந்திருக்கும் மரங்களையும், பரளியாற்றின் அழகையும் பார்த்து ரசித்தனர். 
பின்னர் மறுமுனையில் உள்ள சாய்தள கோபுர படிக்கட்டு வழியாக இறங்கி, கீழே ஓடும் பரளியாற்றில் குளித்து மகிழ்ந்தனர். அருகில் உள்ள சிறுவர் பூங்காவில் சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்து குதூகலத்துடன் வீடு திரும்பினர்.
இதுபோல் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-------------

Next Story