தக்கலை அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண் அதிகாரியை தாக்கி 11 பவுன் நகை பறிப்பு
தக்கலை அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண் அதிகாரியை தாக்கி 11 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
பத்மநாபபுரம்,
தக்கலை அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண் அதிகாரியை தாக்கி 11 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
பெண் அதிகாரி
குமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள பிலாங்காலவிளையை சேர்ந்தவர் ஆஸ்டிக்கான் ஜோஸ்லின். இவருடைய மனைவி நட்சத்திர பிரோமிகா (வயது 35), என்ஜினீயர். இவர் முன்சிறை ஊராட்சி ஒன்றியத்தில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.
சம்பவத்தன்று வேலை முடிந்து தக்கலை வழியாக வீட்டுக்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். சாமிவிளை பகுதியை சென்றடைந்த போது பின்னால் 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்தபடி இருந்துள்ளனர்.
நகை பறிப்பு
இந்தநிலையில் மர்மநபர்கள் திடீரென நட்சத்திர பிரோமிகாவின் கழுத்தில் கிடந்த 11 பவுன் நகையை பறித்து தாக்கியதாக தெரிகிறது. இதனை சற்றும் எதிர்பாராத நட்சத்திர பிரோமிகா நிலைதடுமாறி ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்தார். மேலும் திருடன், திருடன் என சத்தம் போட்டார். இந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர்.
ஆனால் அதற்குள் அந்த நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதற்கிடையே ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்ததில் நட்சத்திர பிரோமிகாவுக்கும் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
மேலும் இந்த சம்பவம் குறித்து தக்கலை ேபாலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
அதே சமயத்தில் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி மர்ம நபர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். பெண் அதிகாரியை தாக்கி நகை பறிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story