இயற்கை உபாதையை கழிக்க சென்றபோது காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி


இயற்கை உபாதையை கழிக்க சென்றபோது காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 8 May 2022 7:29 PM IST (Updated: 8 May 2022 7:29 PM IST)
t-max-icont-min-icon

குன்னூர் அருகே இயற்கை உபாதையை கழிக்க சென்றபோது காட்டு யானை தாக்கி தோட்ட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

குன்னூர்

குன்னூர் அருகே இயற்கை உபாதையை கழிக்க சென்றபோது காட்டு யானை தாக்கி தோட்ட தொழிலாளி பரிதாபமாக இறந்தார். 

காட்டு யானை

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சமவெளி பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த காட்டு யானைகள் குன்னூர், மேட்டுப்பாைளயம் சாலையிலுள்ள ரன்னி மேடு, காட்டேரி போன்ற பகுதிகளில் நடமாடி வந்தன. இந்த பகுதிகளில் யானைகளுக்கு தேவையான தண்ணீர் மற்றும் உணவு கிடைத்து வந்தது. இந்த யானைகள் கடந்த 2 நாட்களாக குன்னூர் அருகே உலிக்கல் பகுதியில் முகாமிட்டு இருந்தன. யானைகள் இரவு நேரங்களில் தேயிலை தோட்டங்கள் மற்றும் சாலைகளில் சுற்றி திரிந்து வந்தன. 
இந்த நிலையில் உலிக்கல் பேரூராட்சிக்குட்பட்ட பவானி எஸ்டேட் பகுதியில் ஒற்றை யானை வந்துள்ளது. இந்த யானை தேயிலை தோட்டத் தொழிலாளி  முருகன் (வயது 40) என்பவரின் வீட்டு பின்புறம் நின்றிருந்தது. 

மிதித்துக் கொன்றது

அப்போது முருகன் இயற்கை உபாதையை கழிக்க நள்ளிரவில் வீட்டின் பின்புறம் சென்றுள்ளார். அங்கு யானை நிற்பதை கவனிக்காமல் யானையின் அருகே முருகன் சென்றுள்ளார். திடீரென்று எதிர்பாராத விதமாக காட்டு யானை முருகனை தாக்கியதோடு, துதிக்கையால் பிடித்து தூக்கி வீசியது. மேலும் அவரை யானை காலால் மிதித்துக் கொன்றது. இதனால் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து அறிந்ததும் கொலக்கொம்பை போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்குசென்ற‌ முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

நிவாரண உதவி

யானை தாக்கி பலியான முருகனுக்கு ஜானகி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற உதவி பாதுகாவலர் சரவணகுமார், வனசரகர் சசிக்குமார் ஆகியோர் முருகனின் மனைவி ஜானகியை சந்தித்து ஆறுதல் கூறி முதல் கட்ட நிதியுதவியாக ரூ.50 ஆயிரம் வழங்கினார்கள்.  தொழிலாளியை தாக்கிய காட்டு யானையை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். காட்டு யானை தாக்கி தொழிலாளி ஒருவர் இறந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

Next Story