பந்தலூரில் மழைக்காலத்தில் அவதிக்குள்ளாக்கும் விளையாட்டு மைதானம்
பந்தலூரில் மழைக்காலத்தில் விளையாட்டு மைதானம் அவதிக்குள்ளாக்குகிறது. அதை தரம் உயர்த்த வீரர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கூடலூர்
பந்தலூரில் மழைக்காலத்தில் விளையாட்டு மைதானம் அவதிக்குள்ளாக்குகிறது. அதை தரம் உயர்த்த வீரர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
விளையாட்டு மைதானம்
கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய 3 மாநிலங்களை இணைக்கும் பகுதியாக கூடலூர் விளங்குகிறது. இங்கு அடர்ந்த வனங்களும், பச்சை பசேல் தேயிலை தோட்டங்களும் உள்ளது. கூடலூரில் இருந்து கேரளா செல்லும் சாலையில் பந்தலூர் பஜார் இருக்கிறது. இங்கு 1 ஏக்கர் 73 சென்ட் பரப்பில் விளையாட்டு மைதானம் உள்ளது. இதில் காலை, மாலை வேளைகளில் வீரர்கள் பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
முந்தைய காலத்தில் மைசூருவில் இருந்து வரும் மன்னர்கள், தங்களது குதிரைகளை ஆங்காங்கே நிறுத்தி ஓய்வெடுப்பது வழக்கம். அவ்வாறு குதிரைகள் கட்டி வைக்கப்பட்டு இருந்த இடம்தான், தற்போது பந்தலூரில் மைதானமாக மாற்றப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
வலியுறுத்தல்
ஆண்டுகள் பல கடந்தாலும் இன்று வரை அந்த விளையாட்டு மைதானத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. இதுதொடர்பாக பல்வேறு மனுக்கள் மற்றும் கோரிக்கைகள் மூலமாக பொதுமக்கள், விளையாட்டு நல ஆர்வலர்கள் வலியுறுத்தியும் மைதானம் தரம் உயர்த்தப்படாமல் உள்ளது. இதனால் மழைக்காலத்தில் சேறும், சகதியுமாக மாறிவிடுவதால் விளையாட முடியாமல் வீரர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே பந்தலூர் பகுதி வீரர்களின் நலன் கருதி விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
தரம் உயர்த்த வேண்டும்
இதுகுறித்து பந்தலூரை சேர்ந்த சிவசுப்பிரமணியம் கூறியதாவது:-
1800-ம் ஆண்டு காலக்கட்டத்தில் மைசூருவில் இருந்து வந்த மன்னர்கள் குதிரைகளுடன் ஓய்வு எடுத்த இடம், பந்தலூரின் தற்போதைய மைதானம். குளிர் மற்றும் கோடை காலங்களில் ஏராளமான வீரர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி வருகின்றனர். ஆனால் அதை இதுவரை மேம்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.
இதற்கிடையே பந்தலூரில் நீதிமன்றம் கட்டுவதற்காக விளையாட்டு மைதானத்தை அதிகாரிகள் தேர்வு செய்ய திட்டமிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுக்கள் அனுப்பப்பட்டது. அங்கு வருவாய்த்துறைக்கு சொந்தமாக சுமார் 100 ஏக்கர் வரை நிலங்கள் உள்ளது. அதில் நீதிமன்றம் கட்ட இடம் ஒதுக்க வேண்டும். வீரர்கள் உடல் திறனை மேம்படுத்துவதற்கான ஒரே வாய்ப்பாக மைதானம் உள்ளது. அதை தரம் உயர்த்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நடவடிக்கை
பந்தலூரை சேர்ந்த நவுசாத் கூறியதாவது:- பந்தலூரில் உள்ள மைதானத்தை மேம்படுத்துவதற்காக மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சில ஆண்டுகளுக்கு முன்பு நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளின் போதிய ஆர்வமின்மையால் அத்திட்டமும் கிடப்பில் போடப்பட்டது. இன்று வரை கபடி, கைப்பந்து, கிரிக்கெட் உள்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் மழைக்காலத்தில் விளையாட முடிவதில்லை. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story