ஏதேனும் ஒரு தொகுதியில் தேர்தலில் நின்று வெற்றிபெற வேண்டும் - உத்தவ் தாக்கரேக்கு, நவ்நீத் ரானா எம்.பி. சவால்
ஏதேனும் ஒரு தொகுதியில் தேர்தலில் நின்று வெற்றிபெற வேண்டும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேக்கு, நவ்நீத் ரானா எம்.பி. சவால் விடுத்துள்ளார்
மும்பை,
ஏதேனும் ஒரு தொகுதியில் தேர்தலில் நின்று வெற்றிபெற வேண்டும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேக்கு, நவ்நீத் ரானா எம்.பி. சவால் விடுத்துள்ளார்.
ஆஸ்பத்திரியில் அனுமதி
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் மும்பையில் உள்ள இல்லமான மாதோஸ்ரீ முன்பு, அனுமன் பஜனை பாட உள்ளதாக அமராவதி சுயேட்சை எம்.பி. நவ்நீத் ரானா மற்றும் அவரது கணவரும் எம்.எல்.ஏ.வுமான ரவி ரானா அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்காக மும்பை வந்த அவர்கள், கடைசி நேரத்தில் தங்கள் திட்டத்தை கைவிட்டபோதும், கடந்த மாதம் 23-ந் தேதி போலீசாரல் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
ரானா தம்பதிக்கு கடந்த 4-ந் தேதி சிறப்பு கோர்ட்டு ஜாமீன் வழக்கியது. இதைத்தொடர்ந்து, 5-ந் தேதி அன்று சிறையில் இருந்து வெளியேறிய எம்.பி. நவ்நீத் ரானா உடல்நலக்குறைவு காரணமாக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு உயர் ரத்த அழுத்தம், உடல்வலி போன்ற பாதிப்புகள் இருப்பதாக வக்கீல் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், ஆஸ்பத்திரியில் இருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நவ்நீத் ரானா எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சிவசேனாவின் ஊழல் ஆட்சி...
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஏதேனும் ஒரு தொகுதியை தேர்வு செய்து, அங்கு மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறுமாறு நான் சவால் விடுக்கிறேன். அவருக்கு எதிராக நான் அந்த தேர்தலில் போட்டியிடுவேன்.
நேர்மையுடன் கடுமையாக உழைத்து அந்த தேர்தலில் வெற்றி பெறுவேன். இதன்மூலம் மக்கள் சக்தியை அவர் அறிந்துகொள்வார்.
14 நாட்கள் சிறையில் இருந்த நான் என்ன குற்றம் செய்தேன்? குற்றம் புரிந்தால் என்னை 14 ஆண்டுகள் கூட நீங்கள் சிறையில் அடைக்கலாம். ஆனால், நான் ராமர் மற்றும் அனுமனின் நாமங்களை உச்சரிப்பதை ஒருபோதும் நிறுத்தமாட்டேன்.
உள்ளாட்சி தேர்தலில் மும்பை மக்களும், ராமரும் சிவசேனாவுக்கு பாடம் புகட்டுவார்கள்.
மும்பையில் ராம பக்தர்களின் துணையுடன் வரும் மாநகராட்சி தேர்தலில் பிரசாரம் செய்து சிவசேனாவின் ஊழல் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தலில் போட்டியிட்டதில்லை
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே இதுவரை நேரடியாக தேர்தலில் போட்டியிட்டதில்லை என்றும், அவரது மகன் ஆதித்ய தாக்கரே தான் அவரது குடும்பத்தில் இருந்து முதல்-முறையாக தேர்தல் களத்தில் களமிறங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் முதல்-மந்திரியாக பதவியேற்ற உத்தவ் தாக்கரே, 2020-ம் ஆண்டு மே மாதம் சட்ட மேலவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
Related Tags :
Next Story