விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகள் சென்னைக்கு ஏற்றுமதி


விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகள் சென்னைக்கு ஏற்றுமதி
x
தினத்தந்தி 8 May 2022 8:17 PM IST (Updated: 8 May 2022 8:17 PM IST)
t-max-icont-min-icon

துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகளுக்கு போதிய விலை கிடைக்காததால் சென்னைக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.

கலசப்பாக்கம்

துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகளுக்கு போதிய விலை கிடைக்காததால்  சென்னைக்கு ஏற்றுமதி செய்கின்றனர். காய்கறிகளை பாதுகாக்க சேமிப்பு கிடங்கை அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போதிய விலை கிடைக்கவில்லை

துரிஞ்சாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட மங்கலம், ஆர்ப்பாக்கம், வேடந்தவாடி, மங்கலம்புதூர், பூதமங்கலம், நூக்காம்பாடி, ஊத்தங்கால், சனானந்தல் உட்பட சுற்றுவட்டாரத்தை சேர்ந்த  30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் தோட்டக்கலை பயிர் செய்து வருகின்றனர்.

இதில் புடலங்காய், கத்தரிக்காய், வெண்டைக்காய், மிளகாய், சுரக்காய், பீர்க்கங்காய் போன்ற பல்வேறு வகையான காய்கறிகளை உற்பத்தி செய்து வருகின்றனர். இவர்களுக்கு தற்போது திருவண்ணாமலை மார்க்கெட்டில் போதிய விலை கிடைக்கவில்லை.

சென்னைக்கு ஏற்றுமதி

இந்த காரணத்தால் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தாங்கள் உற்பத்தி செய்யும் காய்கறிகளை சென்னைக்கு லாரி மூலமாக டன் கணக்கில் ஏற்றுமதி செய்து வருகின்றனர். 

இதுபற்றி அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

தற்போது உள்ள காலகட்டத்தில் கஷ்டப்பட்டு உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. 

வேலை செய்யும் ஆட்களின் கூலி அதிகரித்துள்ளது. மேலும் மருந்து போன்ற இதர பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. கஷ்டப்பட்டு உற்பத்தி செய்யும் காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்காததால் பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகின்றன.

சேமிப்பு கிடங்கு

 துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் அதிகளவில் காய்கறிகள் மற்றும் பூ உற்பத்தி செய்யப்படுவதால் உற்பத்தி அதிகரிக்கும் நேரத்தில் காய்கறிகள், பூக்களின் விலை வீழ்ச்சி அடைவதால் பெரும் நஷ்டம் ஏற்படுகின்றன.

அதனால் காய்கறிகள் மற்றும் பூக்களை ேசமித்து வைக்கும் வகையில் அரசு சார்பில் சேமிப்பு கிடங்கு ஒன்று இப்பகுதியில் கட்டித் தரவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story