மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்


மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்
x
தினத்தந்தி 8 May 2022 8:27 PM IST (Updated: 8 May 2022 8:27 PM IST)
t-max-icont-min-icon

தாயுள்ளத்தோடு யோசித்து மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் என்று அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

தண்டராம்பட்டு

தாயுள்ளத்தோடு யோசித்து மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் என்று அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

வருமுன் காப்போம் திட்ட முகாம்

திருவண்ணாமலை ஒன்றியம் மெய்யூர் கிராமத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம் தொடக்க விழா மற்றும் வட்டார சுகாதார திருவிழா இன்று நடந்தது. 

  கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தார். சுகாதார பணிகள் இணை இயக்குனர் ஆர்.செல்வகுமார் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்து கர்ப்பிணிகளுக்கு மருத்துவ உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள், பள்ளி மாணவர்களுக்கு கண் கண்ணாடிகள் ஆகியவற்றை வழங்கி சிறப்புரையாற்றினார். 

அப்போது அவர் பேசியதாவது:-

1.54 லட்சம் பேருக்கு சிகிச்சை

தலைவர் கருணாநிதி நிர்வகித்த பொதுப்பணித்துறையை தற்போது நான் நிர்வகித்து வருகிறேன்.  தமிழக வளர்ச்சிக்காக இத்துறை மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது 

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 54 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று  பயனடைந்துள்ளனர். தொடர்ந்து பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

24 மணி நேரமும் தமிழகத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தோடு உழைத்து வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் ஓராண்டு நிறைவை ஒட்டி சட்டசபையில் பேசும்போது முத்தான 5 திட்டங்களை அறிவித்தார். 

சிற்றுண்டி வழங்கும் திட்டம்

அதில் குறிப்பாக நாங்களெல்லாம் ஆச்சரியப்படும் வகையில் ஒரு முக்கிய திட்டத்தையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதுதான் பள்ளி குழந்தைகளுக்கு சிற்றுண்டி வழங்கும் திட்டமாகும்.

100 ஆண்டுகளுக்கு முன்பு சர் பி.டி.தியாகராஜர் சென்னை போன்ற பெருநகரத்தில் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். பின்னர் காமராஜர் காலத்தில் அது தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.

 அதன்பின்னர் எம்.ஜி.ஆர்.  சத்துணவு திட்டம் என மாற்றி அமைத்தார். தலைவர் கருணாநிதி மதிய உணவு சாப்பிடும் மாணவர்களுக்கு வாரத்தில் 5 தினங்களுக்கும் முட்டை வழங்கினார். இப்படி மதிய உணவுத் திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது.

ஆனால் இன்றைக்கு ஏழை, எளிய தொழிலாளர்கள்  விவசாயிகள், கூலி வேலை செய்பவர்கள் என அனைத்து குடும்ப பள்ளி சிறுவர்களும் பயன்பெறும் வகையில் காலையில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். 

இதைக் கேட்டபோது எனக்கு கண்ணீர் வந்தது. (கண்ணீர் மல்க அழுதார்).

காரணம் கிராமப்புறங்களில் ஏழை, எளிய மாணவ-மாணவிகள் ஊரில் வசதி படைத்த வீடுகளுக்கு சாப்பாட்டு தட்டை எடுத்து செல்வார்கள். அவர்களுக்கு வசதி படைத்த வீடுகளிலிருந்து சோறு போடுவார்கள் அதை சாப்பிட்டுவிட்டு தான் பள்ளிக்குச் செல்வார்கள். நான்கூட  பழஞ்சோறு சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு சென்றதுண்டு.

 இப்படி கிராமங்களில் தட்டு சோறு முறை இருந்த வரலாறு உண்டு.  அந்த வரலாறு மாற்றப்பட்டு உள்ளது.

தாய் உள்ளத்தோடு 

இன்றைக்கு பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும் என்று சொல்லுகிறபோது ஒரு தாயால்தான் இப்படிப்பட்ட உணர்வோடு தன் பிள்ளைகளை எண்ணிப்பார்க்க முடியும்.

அப்படித்தான் முதல்-அமைச்சரும் தாயுள்ளத்தோடு பள்ளிக் குழந்தைகளின் நிலைமையை எண்ணி அவர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் அற்புத திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார். ஒரு குடும்பத் தலைவரால் மட்டும்தான் தன் குடும்ப நலன் குறித்து சிந்தித்துக் கொண்டே இருக்க முடியும். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து மக்களின் சார்பில் இந்த விழாவின் வாயிலாக நன்றியை  முதல்-அமைச்சருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். 

இவ்வாறு அவர் பேசினார். 

நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் பிரதாப், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார், சி.என்.அண்ணாதுரை எம்.பி., மு.பெ. கிரி எம்.எல்.ஏ., மாநில மருத்துவ அணி துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், திருவண்ணாமலை ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, துணை தலைவர் த.ரமணன், திருவண்ணாமலை நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன்  நகராட்சித் தலைவர் நிர்மலா வேல்மாறன், தண்டராம்பட்டு ஒன்றியக்குழு தலைவர் பரிமளா கலையரசன், ஒன்றிய செயலாளர்கள்  கோவிந்தன், ரமேஷ், சந்திரன், மாரிமுத்து பொதுக்குழு உறுப்பினர் பிரியா விஜயரங்கன், அருணை கன்ஸ்ட்ரக்‌ஷன் துரை.வெங்கட், வட்டார வளர்ச்சி  அலுவலர்கள் கே.சி.அமிர்தராஜ் ஏ.எஸ்.லட்சுமி, மாவட்ட கவுன்சிலர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

முடிவில் வட்டார மருத்துவர் எஸ்.புவனேஸ்வரி நன்றி கூறினார்.


Next Story