தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த அறிவிப்புகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்


தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த அறிவிப்புகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்
x
தினத்தந்தி 8 May 2022 8:29 PM IST (Updated: 8 May 2022 8:29 PM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த அறிவிப்புகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

திருவாரூர்:
தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த அறிவிப்புகள்  படிப்படியாக நிறைவேற்றப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
ஆசிரியர் மன்ற பெருவிழா 
கொரடாச்சேரி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பெருவிழா திருவாரூர் புலிவலத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு ஒன்றியக்குழு  தலைவர் ரவி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சண்முகநாதன் முன்னிலை வகித்தார். இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசினார். 
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பள்ளிகளில் இதுவரை மதிய உணவு மட்டும் வழங்கி வந்த நிலையில் தற்போது  காலை சிற்றுண்டியும் வழங்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 
நல்ல முடிவு எடுக்கப்படும்
இன்றைக்கு உள்ள நிதி நிலைமையையும் கடந்து மாணவர்கள் பள்ளிக்கு கட்டாயம் வர வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இருக்கிறார்கள். கண்டிப்பாக ஆசிரியர்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும். குறிப்பாக  101, 108 ஆகிய அரசாணை மூலமாக ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் சட்டசபை முடிந்த பின்னர் தமிழக முதல்-அமைச்சருடன் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும். 
படிப்படியாக நிறைவேற்றப்படும்
பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு 10 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது ரத்தின கம்பளம் போட்டு விரிக்கவில்லை. நிர்வாகம் நிதி எதுவாக இருந்தாலும் கடுமையான சுமையில் தான் நாங்கள் ஆட்சி பொறுப்பேற்றோம்.
தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த அறிவிப்புகள் ஒவ்வொன்றாக படிப்படியாக நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
பேட்டியின் போது எம்.எல்.ஏ.க்கள் பூண்டி கலைவாணன், அன்பழகன், கோவி.செழியன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story