2 லாரிகள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்தது
2 லாரிகள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்தது
காங்கயம்,
காங்கயம் அருகே 2 லாரிகள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்தது. இதில் உடல் கருகி டிரைவர் பலியானார். 2 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நேருக்கு நேர் மோதல்
கர்நாடக மாநிலம், மைசூரில் இருந்து தூத்துக்குடி நோக்கி 20-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரி திருப்பூர் மாவட்டம் காங்கயம் வழியாக தாராபுரம் நோக்கி சென்றது. அப்போது தாராபுரத்தில் இருந்து காங்கயம் நோக்கி தேங்காய் தொட்டிகள் ஏற்றும் லாரி ஒன்று வந்தது.
ஊதியூரை அடுத்த குண்டடம் பிரிவு பகுதியில் 2 லாரிகளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டது.
தீயில் கருகி டிரைவர் பலி
மோதிய வேகத்தில் ஒரு லாரியின் டீசல் டேங்க் வெடித்து தீப்பிடித்து எரியத்தொடங்கியது. சில நிமிடங்களில் மற்றொரு லாரிக்கும் தீ பரவியது. அப்போது 2 லாரிகளில் இருந்த 3 பேர் பலத்த காயங்களுடன் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதில் மைசூரில் இருந்து இருசக்கர வாகனம் ஏற்றி வந்த லாரியின் டிரைவரான கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பிரபாகரன் (வயது 50) என்பவர் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தேங்காய் தொட்டி லாரி டிரைவரான கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கார்த்தி (26) மற்றும் அவருடன் பயணித்த வடமாநில தொழிலாளி ரோமிலால் (18) ஆகிய 2 பேரையும் பலத்த தீக்காயங்களுடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதையடுத்து அவர்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
2 பேர் படுகாயம்
படுகாயம் அடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்ததும் காங்கயம் தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க போராடினர். பின்னர் சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை முற்றிலும் அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்து குறித்து ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story