சாலை பள்ளத்தில் ஸ்கூட்டர் கவிழ்ந்து சின்னத்திரை நடிகை படுகாயம்
பெங்களூருவில், சாலை பள்ளத்தில் ஸ்கூட்டர் கவிழ்ந்ததில் சின்னத்திரை நடிகை படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பெங்களூரு:
நடிகை சுனேத்ரா பண்டித்
பெங்களூரு பசவனகுடி அருகே வசித்து வருபவர் சுனேத்ரா பண்டித். இவர், கன்னட சின்னத்திரையில் பல்வேறு நாடகங்களில் நடித்து வருகிறார். இவரது கணவர் ரமேஷ் பண்டித் ஆவார். இவர் நடிகர் ஆவார். சுனேத்ரா பண்டித், இதற்கு முன்பு சில கன்னட படங்களிலும் நடித்திருந்தார். தற்போது அவர் சின்னத்திரையில் நடிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது புட்டக்கானா மக்களு என்ற நாடகத்தில் நடிகை சுனேத்ரா பண்டித் நடித்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு சூட்டிங்கில் பங்கேற்று விட்டு தனது ஸ்கூட்டரில் அவர் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். என்.ஆர்.காலனி 9-வது மெயின் ரோட்டில் சென்ற போது சாலையில் இருந்த பள்ளத்தில் சுனேத்ரா பண்டித்தின் ஸ்கூட்டர் இறங்கியதாக தெரிகிறது. இதனால் சாலையில் ஸ்கூட்டர் கவிழ்ந்து விழுந்தது.
படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை
இதன் காரணமாக நடிகை சுனேத்ரா பண்டித் பலத்தகாயம் அடைந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுனேத்ரா பண்டித் ஹெல்மெட் அணிந்திருந்தார். இதனால் ஸ்கூட்டரில் இருந்து விழுந்திருந்தாலும், அவருக்கு தலையில் பெரிய அளவில் காயம் ஏதும் ஏற்படவில்லை என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சாலையில் இருந்த பள்ளமே சுனேத்ரா பண்டித்தின் ஸ்கூட்டர் கவிழ்வதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பசவனகுடி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பெங்களூருவில் உள்ள குண்டும், குழியுமான சாலைகளால் ஏராளமான விபத்துகள் நடந்து உயிர் பலி ஆகும் சம்பவங்கள் நடந்து வருகிறது. தற்போது சாலை பள்ளத்தால் நடிகை சுனேத்ரா பண்டித் படுகாயம் அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story